Published : 27 Sep 2024 03:06 PM
Last Updated : 27 Sep 2024 03:06 PM
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராம் இன்று (செப்.27) காலை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா பணிஓய்வு பெற்றதையடுத்து, நீதிபதி ஆர். மகாதேவன் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்துவந்தார். அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதும், சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி. கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணியாற்றி வந்த கே.ஆர். ஸ்ரீராமை, சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமித்து, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டார். அதன்படி புதிய தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமுக்கு ஆளுநர் மாளிகையில் இன்று (செப்.27) காலை நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, இந்திரா பானர்ஜி, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி, ஓய்வு பெற்ற நீதிபதி கே.என். பாஷா மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது பதவி வகிக்கும் நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், இந்நிகழ்வில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, ரகுபதி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் மற்றும் மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள், தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள கே.ஆர்.ஸ்ரீராமின் குடும்பத்தினர் உள்ளிடோர் பங்கேற்றனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் 34-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள கே.ஆர்.ஸ்ரீராம் அடுத்த ஆண்டு 2025 செப்.27 வரை பதவி வகிப்பார். கடந்த 1986-ம் ஆண்டு வழக்கறிஞராக பணியைத் தொடங்கிய கே.ஆர்.ஸ்ரீராம், கடந்த 2013-ம் ஆண்டு ஜூனில் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மும்பை பல்கலைக்கழகம் மற்றும் லண்டனில் சட்டம் பயின்ற இவர் வணிக சட்டம், சேவை வரி உள்ளிட்டவற்றில் நிபுணத்துவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘பாரம்பரியத்தை காப்பது அனைவரது பொறுப்பு!’ - சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த விழாவில் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்ட கே.ஆர். ஸ்ரீராமை தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி,எஸ்.ராமன் வரவேற்றுப் பேசுகையில், “சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 1981-ம் ஆண்டு தமிழ் நன்றாக பேசத் தெரிந்த எம்.எம்.இஸ்மாயில் தலைமை நீதிபதியாக பதவி வகித்தார். 43 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் தமிழ் நன்றாக பேசும் தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளார். அவருடைய நீதி பரிபாலனத்துக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிப்பர்” என்றார்.
அவரைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் பாஸ்கர், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி. மோகனகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் புதிய தலைமை நீதிபதியை வரவேற்றுப் பேசினர்.
பின்னர் பேசிய தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், “தமிழ்தாய்க்கு எனது முதல் வணக்கம். சகோதர, சகோரிகளுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகள். பள்ளியில் தமிழ் படித்த நிலையில் 500-க்கும் மேற்பட்ட திருக்குறள்களை மனப்பாடம் செய்திருந்தேன். தமிழகத்தின் பாரம்பரியம், கலாச்சாரத்துடன், சென்னை உயர் நீதிமன்றத்தின் பாரம்பரியத்தையும் பாதுகாக்க வேண்டியது அனைவரின் கூட்டுப் பொறுப்பு, இந்த பாரம்பரியத்தை காப்பதில் என்னுடைய பங்கும் இருக்கும். நீதிமன்றம் சுமுகமான முறையில் இயங்க அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். திருக்குறள்களை சுட்டிக்காட்டி நடுநிலைமை தவறாது செயல்படுவேன்” என நன்றி தெரிவித்துக் கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT