Published : 27 Sep 2024 02:08 PM
Last Updated : 27 Sep 2024 02:08 PM
பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் சட்டமன்ற உறுதிமொழிக் குழுவினர் குழுவின் தலைவர் வேல்முருகன் தலைமையில் இன்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், அன்னதானம் குறித்தும் கேட்டறிந்தனர்.
தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழிக் குழுவினர் 2 நாட்கள் ஆய்வுப் பயணமாக திண்டுக்கல் மாவட்டத்துக்கு வந்துள்ளனர். அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) காலை குழுவின் தலைவர் வேல்முருகன் தலைமையில் குழு உறுப்பினர்கள், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் தரிசனம் செய்தனர்.
அதன் பிறகு, மலைக்கோயிலில் உள்ள சித்த மருத்துவ உதவி மையம், அன்னதான கூடத்தை பார்வையிட்டு, உணவு சுகாதாரமான முறையில் தயார் செய்யப்படுகிறதா எனவும், பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அன்னதானம் சாப்பிட்ட பக்தர்களிடம் அன்னதானத்தின் தரம், சுவை குறித்து கேட்டறிந்தனர்.
தொடர்ந்து, ஒட்டன்சத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக் கிடங்கு, ரெட்டியார்சத்திரத்தில் உள்ள காய்கறி மகத்துவ மையம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, சார் ஆட்சியர் கிஷன் குமார், எம்எல்ஏ-க்கள் அரவிந்த் ரமேஷ், அருள், சக்கரபாணி, நல்லதம்பி, மாங்குடி, மோகன், ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT