Last Updated : 27 Sep, 2024 12:18 PM

 

Published : 27 Sep 2024 12:18 PM
Last Updated : 27 Sep 2024 12:18 PM

தீபாவளிக்குள் ரேஷனில் இலவச அரிசி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உறுதி

கோப்புப் படம்

புதுச்சேரி: புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தீபாவளிக்குள் ரேஷனில் இலவச அரிசி வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

உலக சுற்றுலா தினத்தையொட்டி புதுச்சேரியில் சித்தர் சுற்றுலா பயண நிகழ்ச்சியை துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, பேரவைத்தலைவர் செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.

அதைத் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி அழகிய மாநிலம். பழமையான கட்டிடங்கள், தெருக்கள், கடற்கரை உள்ள மாநிலம். அதனால் தான் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வரவிரும்புகின்றனர். புதுச்சேரி ஆன்மிக பூமி. சித்தர்கள் வாழ்ந்த, வாழும் பூமி. அரவிந்தர் ஆசிரமம், சித்தானந்தர் கோயில், மணக்குள விநாயகர் கோயில் என ஆன்மிக தலங்கள் பல இங்கு உள்ளன. அதுமட்டுமில்லாமல் பொழுதுபோக்கு கடற்கரை, அமைதியான சூழல் உள்ளது.

21 கி.மீ தொலைவுக்கு கடற்கரை உள்ளது. கிராம கடற்கரைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். கீழூர், பாகூர், குருவிநத்தம் என அழகிய கிராமங்கள் உள்ளன. அனைத்து நாடுகளின் உணவும் இங்கு கிடைக்கிறது. சுற்றுலாவை வளர்க்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷனில் விரைவில் இலவச அரிசி தரப்படும். அதற்கான ஒப்புதலை பெற்று நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்குள் ரேஷன் கடைகளில் இலவச அரிசி தரப்படும். மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உள்ளதால் எங்களுக்கு தேவையான நிதியை எப்போதும் மத்திய அரசு தரும். பிரதமரை எப்போது வேண்டுமானாலும் நாங்கள் சந்திப்போம்.

புதுச்சேரியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு கட்டுக்குள்தான் உள்ளது. டெங்கு மட்டுமில்லாமல் இதர காய்ச்சல்களையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். கொசு மருந்து தெளிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். அனைத்து துறைகளும் தற்போது இணைந்து பணியாற்றுகின்றனர்.

சுகாதாரத்துறை இயக்குநர் விரைவில் நியமிக்கப்படுவார். மக்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் அரசு மருத்துவமனைகளில் இருப்பு உள்ளது. புதுச்சேரியின் தேவைகள் குறித்து மத்திய அரசுக்கு நிறைய மனுக்களை தந்துள்ளோம். அதுபோல இப்போது மத்திய உள்துறை செயலரிடமும் மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x