Published : 27 Sep 2024 08:26 AM
Last Updated : 27 Sep 2024 08:26 AM

மருத்துவ ஆராய்ச்சிக்கான அரசின் உதவித்தொகை ரூ.1 கோடியாக உயர்வு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை: மருத்துவ ஆராய்ச்சிக்கான உதவித்தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு ‘மருத்துவத்தின் செயற்கை நுண்ணறிவு கருத்து கட்டுரை தொகுப்பு’ புத்தகத்தை வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து, மருத்துவ ஆசிரியர்கள், முதுநிலை மற்றும் இளநிலை பட்டதாரிகளுக்கு சிறந்த ஆராய்ச்சியாளர்களுக்கான விருதை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு புதிய திட்டங்கள் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு உலகம் முழுவதிலும் இருந்து வந்த மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்ற 3 நாள் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அதன்மூலம் ஏராளமான மருத்துவ வல்லுநர்கள் தங்களுடைய ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தார்கள். அதுமட்டுமில்லாமல், தொற்றும் நோய், தொற்றா நோய்கள் என உலக மக்களை அச்சுறுத்திகொண்டிருக்கிற பல்வேறு நோய்களுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில், ஆராய்ச்சி தினத்தை பொறுத்தவரை மாணவர்கள், மருத்துவர்கள், மருத்துவ வல்லுநர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்று 1,500 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் விதமாக பல்வேறு படைப்புகளை மாணவர்கள் வழங்கியிருக்கிறார்கள். செயற்கை நுண்ணறிவு உலகளவில் மருத்துவத்துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சிறப்பான ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தவர்களுக்கு சிறந்த அறிவியலாளர் விருதுகளும் வழங்கப்படுகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆராய்ச்சிக்காக ஆண்டுக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு முதல் உதவித் தொகை ரூ.1 கோடியாக உயர்த்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.நாராயணசாமி, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் ஜெ.சங்குமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x