Published : 27 Sep 2024 06:05 AM
Last Updated : 27 Sep 2024 06:05 AM

திருப்பதி லட்டு விவகார வீடியோ - ‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் மீது ஆந்திரா டிஜிபியிடம் தமிழக பாஜக புகார்

சென்னை: திருப்பதி லட்டு குறித்து யூடியூப் சேனல் ஒன்று வீடியோ வெளியிட்டு கிண்டல் செய்ததை தொடர்ந்து, அந்த சேனல் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆந்திர மாநில டிஜிபியிடம் தமிழக பாஜக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருப்பதி லட்டு விவகாரத்தை கேலியாக விமர்சித்து பிரபல யூடியூப் சேனலான ‘பரிதாபங்கள்’ சேனலில் வீடியோ வெளியிடப்பட்டது.

கோபி, சுதாகர் மற்றும் டிராவிட் செல்வம் ஆகியோரின் ‘லட்டு பாவங்கள்’ என்ற தலைப்பில் வெளியான வீடியோவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், அந்த வீடியோ உடனடியாக நீக்கப்பட்டது. மேலும் அந்த வீடியோவுக்காக சேனல் தரப்பில் மன்னிப்பும் கோரப்பட்டது. வீடியோவை நீக்கினாலும், அந்த சேனலை பின் தொடருபவர்கள், அதனை பதிவிறக்கம் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் மீது தமிழக பாஜக சார்பில் தமிழக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி ஆந்திர மாநில டிஜிபியிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், ‘கோபி, சுதாகர் இயக்கும் ‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனலில் ‘லட்டு பாவங்கள்’ என்ற வீடியோ வெளியிடப்பட்டது.இந்த வீடியோவில் இந்து மத நம்பிக்கையையும், அதன் நடைமுறைகளையும் நேரடியாக குறிவைத்து அவதூறான கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக, ‘மாட்டு இறைச்சி’, ‘மீன் எண்ணையுடன்’ கூடிய திருப்பதி லட்டு சுவையாக இருக்கும் என்று அவர்கள் கூறுவது, இந்த புனித பிரசாதத்தின் மத முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட்டுள்ளது.

மேலும், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் குறித்தும் அவதூறான கருத்துகள் வீடியோவில் உள்ளன. எனவே, மத உணர்வுகளை சீர்குலைக்கும் வகையில் வீடியோவை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x