Published : 05 Jun 2018 06:46 PM
Last Updated : 05 Jun 2018 06:46 PM
தமிழக மகிளா காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்த நக்மா திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவருடைய மாற்றத்திற்கு குஷ்பூவும், ஜான்சி ராணியும் காரணம் என்கிற கருத்து எழுந்துள்ளது. காங்கிரஸில் குஷ்பூவின் கை ஓங்குகிறதோ என்ற பேச்சு எழுந்துள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியைப்பற்றி யார் பேசினாலும் சொல்லும் ஒரே வார்த்தை கோஷ்டி பூசல். காமராஜர் காலம் தொடங்கி திருநாவுக்கரசர் காலம் வரை வெளிப்படையாக கொஷ்டி அரசியல் தெரியும்வகையில் வார்த்தைப்போர், அறிக்கைப்போர் நடக்கும்.
தலைவர்கள் மட்டுமல்ல அணிகளின் தலைவர்களும் தங்களுக்குள் பிரிந்து மோதிக்கொள்வார்கள். தமிழக காங்கிரஸில் திருநாவுக்கரசர் அணி, ஈவிகேஎஸ் அணி, சிதம்பரம் அணி, தங்கபாலு அணி, மணி சங்கர் அய்யர் அணி என பல உண்டு.
இதில் திருநாவுக்கரசர் அணி, ஈவிகேஎஸ் அணி, சிதம்பரம் அணி பிரதானம். அதிலும் முதலிரண்டு அணிகள் பிரதானமாக இருக்கும். திருநாவுக்கரசர் அணியில் சில மாவட்ட தலைவர்கள், கட்சியில் தலைவராக இருப்பதால் உடனிருக்கும் தலைவர்கள் இருக்கிறார்கள்.
சிதம்பரம் அணியில் அவரது மகன், கராத்தே தியாகராஜன், செல்வப்பெருந்தகை போன்ற இரண்டாம் கட்டத்தலைவர்கள் உள்ளனர். கே.ஆர்.ராமசாமி ஆதரவாளராக உள்ளார். ஈவிகேஎஸ் அணியில் குஷ்பூ பிரதான ஆதரவாளராக உள்ளார்.
8 எம்.எல்.ஏக்களில் 7 பேர் தனியாக உள்ளனர். இதுதவிர சிறு சிறு கோஷ்டிகள் உண்டு. அது நேரத்திற்கு ஏற்றார்போல் மாறும். இதனிடையே புதிய கோஷ்டியாக இரண்டு மும்பை வரவுகள் தங்களுக்குள் மோதிக்கொண்டதை காங்கிரஸ் கட்சி பார்த்தது. அது நக்மா, குஷ்பூ. இருவருமே தமிழில் நடித்த நடிகைகள். இருவரும் காங்கிரஸ் மேலிடத்துக்கு நெருக்கமானவர்கள். குஷ்பூ நன்றாக தமிழ் பேசுவார். திமுகவிலிருந்து காங்கிரஸுக்கு வந்தவர்.
நக்மாவுக்கு தமிழ் வராது. நேரடியாக மகிளா காங்கிரஸ் தலைவியாக தமிழகத்திற்கு இறக்குமதியானவர். குஷ்பூ நக்மா மோதல் வெளிப்படையாக பல இடங்களில் வெளிவந்துள்ளது. ஒரு ஆர்ப்பாட்டத்தில் வெளிப்படையாக குஷ்பூ அமர நாற்காலியை தர மறுத்தார் நக்மா.
குஷ்பூ அடிக்கடி சர்ச்சையில் சிக்கியுள்ளார். பொது சிவில் சட்டம் குறித்து பேசும்போது பாஜகவுக்கு ஆதரவான கருத்தை கூறி சர்ச்சையில் சிக்க திருநாவுக்கரசர் அதை பகீரங்கமாக கண்டித்தார். பின்னொருமுறை ஈவிகேஎஸ் தான் சிறந்த தலைவர் அவர் விரைவில் வருவார் என்று பேசி சர்ச்சையை கிளப்பினார்.
நக்மா எதுவும் பேசாவிட்டாலும் மாநில மகளா காங்கிரஸ் தலைவர் ஜான்சி ராணி உள்ளிட்டோரை மதிப்பதில்லை என்ற கெட்ட பெயர் உண்டு. சமீபத்தில் ஒரு கூட்டத்தில் தன்னருகில் அமரக்கூடாது என்று ஜான்சி ராணியை நக்மா தள்ளி உட்காரச்சொன்னது கட்சிக்குள் புகாராய் சென்றது. இதையடுத்து நக்மாவை அதிரடியாக டெல்லி மேலிடம் மாற்றிவிட்டு கேரளாவை சேர்ந்த பாத்திம்னா ரோஸ்னா என்பவரை நியமித்துள்ளது.
இதற்கான உத்தரவை அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதாதேவ் பிறப்பித்துள்ளார். நக்மா தமிழகத்தில் ஒரு ரவுண்டு வர எண்ணினார். குஷ்பூவை ஓரங்கட்ட நினைத்த கராத்தே தியாகராஜன் போன்றோர் இதற்கு ஆதரவளித்தனர். சென்னையில் மத்திய சென்னை அல்லது தென் சென்னையில் எப்படியும் எம்பி சீட்டு வாங்கி நிற்க வேண்டும் என்று நக்மா திட்டமிட்டு மு.க.ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோரை சென்று பார்த்தார்.
ஆனால் தென் சென்னை எம்பி தொகுதியின் மீது கண் வைத்திருக்கும் குஷ்பூவுக்கு இது அதிர்ச்சியாக இருந்ததால் நக்மாவை நகர்த்த பல விதங்களில் அவர் முயற்சி எடுத்ததாகவும், அதற்கு ஏற்றாற்போல் ஜான்சிராணியிடம் நக்மா முறுக்க அதை குஷ்பூ வாய்ப்பாக பயன்படுத்தியதாக காங்கிரஸ் கட்சிக்குள் பேச்சு அடிபடுகிறது.
குஷ்புவுக்கு தென் சென்னை உறுதியாகிவிட்டது. வென்றால் 2019-ல் அமைச்சர் ஆவார் என்கிற அளவுக்கு அவரது ஆதரவாளர்கள் தரப்பில் நம்பிக்கையுடன் பேசிக்கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸில் குஷ்பூவின் கை ஓங்கி வருகிறதா? என்பது தற்போதுள்ள கேள்வி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT