Published : 26 Sep 2024 04:46 PM
Last Updated : 26 Sep 2024 04:46 PM

பந்தலூர் அருகே யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு: பாதுகாப்புக் கோரி பொதுமக்கள் மறியல்

பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி அடுத்துள்ளது சப்பந்தோடு கிராமம். இந்தக் கிராமத்தை சேர்ந்தவர் முகமது (54). இவரது வீட்டின் பின்புறம் பாக்குத் தோட்டம் உள்ளது. இங்கு ஏராளமான பாக்கு மரங்களை வளர்த்து பராமரித்து வந்தார். இந்த நிலையில், இன்று அதிகாலை வனத்தை விட்டு வெளியேறிய 2 காட்டு யானைகள் சப்பந்தோடு கிராமத்துக்குள் புகுந்தன. குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த அந்த யானைகள், முகமது-வின் பாக்கு தோட்டத்துக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த பாக்கு மரங்களை பிடுங்கி எறிந்து சேதப்படுத்தின. அப்போது, தூங்கிக் கொண்டிருந்த முகமது சத்தம் கேட்டு எழுந்துள்ளார். பின்னர் வீட்டுக்கு பின்னால் சென்று பாக்குத் தோட்டத்துக்குள் டார்ச் அடித்து பார்த்துள்ளார்.

அப்போது தோட்டத்துக்குள் 2 காட்டு யானைகள் நிற்பதை பார்த்துவிட்டு அதிர்ந்த அவர் உடனடியாக வீட்டிற்குள் செல்ல முயன்றுள்ளார். ஆனால், அதற்குள் அந்த யானைகளில் ஒன்று முகமதை நோக்கி விரட்டி வந்தது. இதனால் அச்சமடைந்த அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால், யானை துரத்தி வந்து, முகமதை தாக்கி தூக்கி வீசியது. இதில் பலத்த காயமடைந்த முகமது, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்களும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் அங்கு ஓடிவந்து பார்த்துள்ளனர். அப்போது அங்கு காட்டு யானைகள் இரண்டும் நின்றிருந்தன. பொது மக்கள் சத்தம் போட்டு விரட்டியதும் யானைகள் அங்கிருந்து நகர்ந்து சென்றன. இது குறித்து தகவலறிந்ததும் வனத்துறையினர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இச்சம்பவம் நடந்த இடத்தை பார்த்து விட்டு, முகமதின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். ஆனால் முகமதின் உறவினர்கள் அவரது உடலை எடுக்கவிடாமல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முகமது

யானை தொல்லையில் இருந்து நிரந்தர தீர்வு வேண்டும் எனக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் வனத்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள், தொடர்ந்து இப்பகுதியில் யானை நடமாட்டம் இருப்பதால் யானைகளிடம் இருந்து பாதுகாப்பு கோரியும், இங்கு சுற்றி திரியும் யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வேண்டும் என வலியுறுத்தியும் சேரம்பாடி சுங்கம் பகுதியில் உடலை எடுக்க விடாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2 மணி நேரத்திற்கும் மேலாக இந்தப் போராட்டம் நீடித்தது. மாவட்ட ஆட்சியர் வந்து யானைகளிடம் இருந்து உரிய பாதுகாப்பு வழங்குவதாக உறுதியளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்து போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதையடுத்து பாதுகாப்புக்காக அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். பொதுமக்களின் இந்த போராட்டத்தால், தமிழக - கேரள எல்லையின் முக்கிய சாலையாக கருதப்படும் இந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இறுதியாக, கூடலூர் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு மற்றும் காவல்துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டிருந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். யானைகளை வனத்துக்குள் விரட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து, பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x