Last Updated : 26 Sep, 2024 03:56 PM

 

Published : 26 Sep 2024 03:56 PM
Last Updated : 26 Sep 2024 03:56 PM

பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு: பாஜக நிர்வாகிக்கு ஐகோர்ட் கிளை நிபந்தனை முன்ஜாமீன்

மாதிரிப் படம்

மதுரை: பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் பாஜக நிர்வாகிக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது.

பழநி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் தயாரிக்க, திருப்பதி லட்டு விவகாரத்தில் பேசப்படும், திண்டுக்கல்லைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் கோவையை சேர்ந்த பாஜக தொழிற் பிரிவு துணைத்தலைவர் செல்வகுமார் கருத்து பதிவிட்டு இருந்தார்.

இதையடுத்து, செல்வகுமார் மீது பழநி கோயில் நிர்வாகம், அளித்த புகாரின் பேரில் பழநி அடிவாரம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்கக்கோரி செல்வகுமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

அதில், ‘திருப்பதி திருமலா தேவஸ்தானத்துக்கு நெய் வழங்கிய திண்டுக்கல்லைச் சேர்ந்த நிறுவனம் ஏற்கெனவே அவர்களால் தடை செய்யப்பட்டு விட்டதாக கூறப்படும் நிலையில், அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலின் டிரஸ்டி உறுப்பினராக இருக்கிறார். ஏற்கெனவே இது தொடர்பான சுற்றறிக்கையில் இருந்த தகவலையே நான் ட்வீட் செய்திருந்தேன். தவறான நோக்கில் தவறான செய்தியை பரப்பவில்லை.

இந்த வழக்கில் நான் தவறுதலாக சிக்கவைக்கப்பட்டுள்ளேன். நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும், வழக்கு விசாரணைக்கும் ஒத்துழைக்கிறேன். சாட்சிகளை கலைக்க மாட்டேன். ஆகவே, இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், “மனுதாரர் தவறான தகவலை ட்வீட் செய்ததால் மதரீதியான பிரச்சினைகள் உருவாகும் சூழல் ஏற்பட்டது. மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இதுபோன்ற தரம் தாழ்ந்த அரசியல் செய்யப்படுகிறது. மனுதாரர் மூன்றாம் முறையாக இதுபோன்ற தவறைச் செய்துள்ளார். ஆகவே, மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது” என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி, “மனுதாரர் வாய்ச்சொல் வீரராக இல்லாமல் நிஜத்தில் சேவைகளைச் செய்ய வேண்டும். ட்வீட் செய்வதற்கு முன்பாக அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த மனுதாரர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அரசு தரப்பில், அவர் பகிர்ந்த தகவல் தவறானது என்றும், பழநி பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்காக ஆவினில் இருந்து மட்டுமே நெய் வாங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்வதற்கு முன்பாக அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். மனுதாரர் 3 வாரங்களுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். தனது அலைபேசியை காவல்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

மனுதாரர் செய்த ட்வீட்டை டெலிட் செய்வதோடு, அந்த ட்வீட் உண்மைத் தன்மையை உறுதி செய்யாமல் பதிவிடப்பட்டது என சமூக வலைதளங்களில் தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் முன் ஜாமீன் வழங்கப்படுகிறது. தொடர்ந்து இதுபோல பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால், சமூக ஊடகங்களில் இருந்து வெளியேற உத்தரவிட நேரிடும்.” என தீர்ப்பளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x