Published : 26 Sep 2024 03:41 PM
Last Updated : 26 Sep 2024 03:41 PM
சென்னையில் சாலைகள், தெருக்களின் மையப் பகுதியில் செல்லும் கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டால் அதை சரி செய்வதற்காக ஆங்காங்கே 1 லட்சத்து 68 ஆயிரம் மனித நுழைவாயில்கள் (Manholes) அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சாலை மட்டத்துக்கு இல்லை. அதற்கு மாறாக பள்ளமாகவும், மேடாகவும் இருப்பதால் இருசக்கர வாகனங்கள் விழுந்து எழுந்தும் திடீரென மேட்டில் ஏறியும் தடுமாறிச் செல்கிறது. சாலைகளில் திடீரென பள்ளத்தையும், மேடான பகுதியையும் பார்த்து இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் திடீர் திடீரென பள்ளமாகவும், மேடாகவும் காணப்படும் மனித நுழைவு வாயில்களைக் கண்டு ஒருகணம் அச்சத்தில் உறைகின்றனர்.
முன்னால் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் திடீரென பிரேக் போட்டாலோ, வலதுபுறம் அல்லது இடதுபுறமாக வாகனத்தை திருப்பி இயக்கினாலோ வாகன விபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் அதிரவைக்கிறது. பலரும் மனித நுழைவுவாயில்களில் விழுந்து கை, கால்களில் சிராய்ப்பும், எலும்பு முறிவு போன்ற லேசான பாதிப்புகளோடு போவதை காண முடிகிறது.
முன்பெல்லாம் சாலையை பெயர்த்து எடுக்காமல் அதன்மேலேயே சாலை அமைத்ததால் மாநகர தெருக்களின் இருபுறமும் பள்ளமாகிவிட்டன. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், "இனிமேல் சாலையை பெயர்த்து எடுத்துவிட்டுத்தான் புதிய சாலையை அமைக்கவேண்டும்" என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகுதான், சாலையை பெயர்த்து எடுத்துவிட்டு புதிய சாலை அமைக்கின்றனர். ஆனால், சாலை மட்டத்துக்கு மனித நுழைவுவாயில்கள் அமைக்க வேண்டும் என்பதில் எந்த துறைக்கும் அக்கறையில்லை.
இந்த விவகாரத்தில் சென்னை மாநகராட்சி, சென்னைக் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், நெடுஞ்சாலைத் துறை ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைந்த செயல்பாடுகள் இல்லாததே காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: சென்னை முழுவதும் கழிவுநீர் குழாய்கள் செல்லும் சாலைகள், தெருக்களில் 1 லட்சத்து 68 ஆயிரம் மனித நுழைவுவாயில்கள் உள்ளன.
சாலைகளில் கனரக வாகனங்கள் செல்லும் போது மனித நுழைவு வாயில்கள் சேதமடைகின்றன. முடிந்தவரை சாலைகளை மனித நுழைவு வாயில்கள் மட்டத்துக்கு அமைக்க வேண்டும் என்று கோருகிறோம். வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் மனித நுழைவுவாயில்களைச் சுற்றி வெண்மை நிற பூச்சும், இரவில் ஒளிர்வதற்காக பிரதிபலிப்பு ஸ்டிக்கர்களும் பதிக்கப்படுகின்றன.
ஆனால், அவை வாகனங்களாலும், சாலை போடும்போதும் சேதமடைந்துவிடுகின்றன. செங்கலைக் கொண்டு மனித நுழைவுவாயில்கள் அமைத்ததால் சேதமடைந்தன. அதனால் இப்போது கான்கிரீட் கலவையைக் கொண்டு அமைப்பதால் பள்ளம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. அதுபோல சாலை அமைக்கும்போது மனித நுழைவாயில்கள் மட்டத்துக்கு சாலை அமைக்க சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...