Published : 26 Sep 2024 03:35 PM
Last Updated : 26 Sep 2024 03:35 PM

சென்னையில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு இல்லாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: தமாகா

சென்னையில் புதன்கிழமை இரவு பெய்த மழையின் காரணமாக பேசின் பாலத்தில் தேங்கி நின்ற மழை நீர் | படம்: பி.ஜோதி ராமலிங்கம்

சென்னை: “ஆட்‌சி பொறுப்பேற்ற இந்த மூன்றரை ஆண்டுகளில்‌ மழை வரும்போதெல்லாம்‌ சென்னை மக்கள்‌ மழை வெள்ள பாதிப்பால்‌ மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருறார்கள்‌.ஒவ்வொரு முறையும்‌ மக்கள்‌ பாதிக்கப்பட்டப்‌ பிறகுதான்‌, அரசு விழித்துக்‌ கொண்டு செயலாற்றும்‌ என்றால்‌, அது அரசின்‌ நிர்வாகத்‌ திறமையின்மையும்‌, அலட்சியமும்‌ தான்‌ என்பதை எவராலும்‌ மறுக்க முடியாது,” என்று தமாகா பொதுச் செயலாளர் எம்.யுவராஜா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில்‌ மழைப்பொழிவு மற்றும்‌ முறையான வடிகால்‌ கட்டமைப்புகள்‌ இல்லாமை ஆகியவற்றின்‌ காரணமாக சென்னை
மாநகரத்தில்‌ மக்களின்‌ இயல்பு வாழ்க்கை பாப்பு பெரும்‌ வேதனையளிக்கிறது. தமிழகத்தின்‌ தலைநகரமாகவும்‌, மக்கள்‌ அடர்த்தி மிகுந்த தொழில்‌ நகரமாகவும்‌ விளங்கும்‌ சென்னையில்‌ அடிப்படைக்‌ கட்டுமானம்‌ இல்லாததன்‌ விளைவை ஓவ்வொரு ஆண்டும்‌ மக்கள்‌ அனுபவித்து வருவது வேதனையளிக்கிறது.

சென்னை மாநகரம்‌ நேற்று (செப்.25) பெய்த சிறிய மழைக்கு மீண்டும்‌ வெள்ளக்காடாக மாறியது. திமுக அரசால்‌ திட்டமிடப்பட்ட 4000 கோடி ரூபாய்‌ மதிப்பிலான மழைநீர்‌ வடிகால்‌ பணிகள்‌ என்ன ஆனது? திமுக ஆட்சிப்‌ பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. தேர்தல்‌ வாக்குறுதியில்‌ ஒரு சொட்டு தண்ணீர்‌ கூட தேங்காத அளவுக்கு சென்னையை மாற்றுவோம்‌ என்று வாக்குறுதி அளித்தார்கள்‌.

ஆனால்‌ எந்த ஒரு கட்டமைப்பு வேலைகளையும்‌ இந்த அரசு இன்று வரையிலும்‌ ஏற்படுத்தவில்லை. மாறாக தமிழக அரசு குறிப்பாக விளையாட்டுத்துறை அமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின்‌‌ தலைமையில்‌ கடந்த மாதம்‌ மக்களுடைய வரிப்பணத்தில்‌ அவசியம்‌ இல்லாத கார்‌ பந்தயத்தை நடத்தினார்கள்‌. கார்‌ பந்தயம்‌ நடத்துவதற்கு என்று முறையான இடம்‌ சென்னையில்‌ உள்ளது. அதைத்‌ தவிர்த்து விட்டு போக்குவரத்து நெரிசல்‌ மிகுந்த பகுதியில்‌ கார்‌ பந்தயம்‌ நடத்த வேண்டிய அவசியம்‌ என்ன?

அந்தப்‌ பந்தயத்‌துக்கு முன்பாக மழை பெய்தது. அடுத்த அரை மணி நேரத்தில்‌ மழை நீரை அப்புறப்படுத்தி இந்த போட்டியை நடத்தினார்கள்‌. ஆனால்‌ ஆட்‌சி பொறுப்பேற்ற இந்த மூன்றரை ஆண்டுகளில்‌ மழை வரும்போதெல்லாம்‌ சென்னை மக்கள்‌ மழை வெள்ள பாதிப்பால்‌ மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருறார்கள்‌.

ஒவ்வொரு முறையும்‌ மக்கள்‌ பாதிக்கப்பட்டப்‌ பிறகுதான்‌, அரசு விழித்துக்‌ கொண்டு செயலாற்றும்‌ என்றால்‌, அது அரசின்‌ நிர்வாகத்‌ திறமையின்மையும்‌, அலட்சியமும்‌ தான்‌ என்பதை எவராலும்‌ மறுக்க முடியாது. ஆகையால்‌ முதல்வர்‌ இனியாவது வருகின்ற (மழை காலங்களில்‌) நவம்பர்‌ மற்றும்‌ டிசம்பர்‌ மாதங்களில்‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மக்களை பாதுகாத்து நோய்‌ தொற்று ஏற்படா வண்ணம்‌ தடுக்க முன்னெச்சரிக்கை மற்றும்‌ சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்‌ எனவும்‌ தமிழக அரசைக்‌ கேட்டுக் கொள்கிறேன்." என்று அவர் கூறியுள்ளார்‌.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x