Published : 26 Sep 2024 02:36 PM
Last Updated : 26 Sep 2024 02:36 PM
விழுப்புரம்: தேசிய அளவில் மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்பது மக்களை ஏமாற்றும் செயல் என தமிழக அரசு மீது பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது: இலங்கையில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டணியின் தலைவர் அநுர குமார திசநாயக்க வெற்றி பெற்றிருக்கிறார். ஈழத்தமிழர் சிக்கலுக்கு என்றாவது ஒருநாள் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையை இவரது வெற்றி சிதைத்திருக்கிறது.
புதிய அதிபர் திசநாயக்க தம்மை தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டணியின் தலைவராக காட்டிக் கொண்டாலும், அவர் ஜனதா விமுக்தி பெரமுனா என்ற சிங்கள பேரினவாத இயக்கத்தின் தலைவர் ஆவார். இலங்கையில் அமைதியை ஏற்படுத்தவும், தமிழர்களுக்கு அதிகாரப்பரவல் வழங்கவும் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளையும் இவர் கடுமையாக எதிர்த்தவர். தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களை ஊக்குவித்தவர். இடதுசாரி இயக்கம் என்று தங்களைக் கூறிக் கொண்டாலும் தமிழர்கள் எதிர்ப்பு தான் திசநாயக்கவின் முதன்மைக் கொள்கை ஆகும்.
தமிழர்களுக்கு எதிரான மனநிலை கொண்ட திசநாயக அரசு, இறுதி போரில் படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களுக்கும் நீதி பெற்றுத் தர எதுவும் செய்ய மாட்டார். அநுர குமார திசநாயக்க கடந்த காலங்களில் இந்தியாவுக்கு எதிராக பல போராட்டங்களை முன்னின்று நடத்தியிருக்கிறார் என்பதால், இந்திய - இலங்கை உறவுகளை வலுப்படுத்துவதற்கு எந்த அளவுக்கு உதவியாக இருப்பார் என்பது ஐயம் தான். சீனாவுக்கு சாதகமான கொள்கை நிலைப்பாடுகளை அவர் மேற்கொண்டிருப்பதாக வெளியாகும் செய்திகள் கவலையளிக்கின்றன.
எனவே, ஈழத்தமிழர் சிக்கலுக்கு நீடித்த தீர்வு காணுதல், போர்க்குற்றங்களுக்கு காரணமான அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டித்தல், தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணுதல், இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் ஆதிக்கத்தை நிலை நிறுத்துதல், இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டு இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையை இந்திய அரசு மாற்றியமைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தேசிய அளவில் மதுவிலக்குக் கொள்கை வகுப்பப்பட வேண்டும்; அவ்வாறு வகுக்கப்பட்டால் தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தத் தயார் என்று மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி கூறியிருக்கிறார்.
இது போகாத ஊருக்கு வழி காட்டும் செயலாகும். மதுவிலக்கு என்பது மாநிலப் பட்டியலில் உள்ளது. மதுக்கடைகளை திறப்பது, மூடுவது, மது ஆலைகளை திறப்பது, மூடுவது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு தான் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். மாறாக, மத்திய அரசு மதுவிலக்கு கொள்கையை வகுக்க வேண்டும்; தேசிய அளவில் மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்பது மக்களை ஏமாற்றும் செயல்.
தமிழ்நாட்டில் ஒரே நாளில் மதுக்கடைகள் மூடப்பட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என அமைச்சர் முத்துசாமி கூறுவது தவறானது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதை மீட்பு மையங்களை அமைத்தல், கள்ளச்சாராயத்தைத் தடுக்க தனிப்படைகளை அமைத்தல் ஆகிய நடவடிக்கைகளின் மூலம் தமிழக அரசு நினைத்தால் அடுத்த வாரத்திலிருந்து கூட மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியும். மதுவுக்கு எதிரான பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டம் தொடரும். தமிழ்நாட்டில் மதுவிலக்கை கொண்டு வரும் வரை பாட்டாளி மக்கள் கட்சி ஓயாது.
கர்நாடகத்தில் மைசூர் நில மோசடி தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா மீது தொடரப்பட்டுள்ள வழக்கை அம்மாநில லோக் ஆயுக்தா அமைப்பு விசாரிக்க கர்நாடக சிறப்பு நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்க வசதியாக லோக் ஆயுக்தா எனப்படும் மக்கள் நீதிமன்றங்கள் வலிமையாக இருக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால், கர்நாடகத்தில் இருப்பது போன்ற வலிமையான லோக் ஆயுக்தா தமிழ்நாட்டில் இல்லை. பா.ம.க.வின் தொடர் வலியுறுத்தல் காரணமாக கடந்த 2018ம் ஆண்டில் தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா சட்டம் இயற்றப்பட்டு, லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டது. ஆனால், முதல்வரை விசாரிக்கும் அதிகாரம் லோக் ஆயுக்தாவுக்கு வழங்கப்படவில்லை.
அதில் ஒரு தலைவரும், 4 உறுப்பினர்களும் இருக்க வேண்டும். ஆனால், தலைவரும், இரு உறுப்பினர்களும் இல்லாமல் தமிழ்நாடு லோக் ஆயுக்தா பல மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது. அவர்களை தேர்ந்தெடுக்க கடந்த ஏப்ரல் மாதமே தேர்வுக்குழு அமைக்கப்பட்டும், எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
தமிழ்நாடு லோக் ஆயுக்தா கடந்த சுமார் 500 வழக்குகளை மட்டுமே விசாரித்திருக்கிறது. எந்த பொது ஊழியரும் தண்டிக்கப்பட்டதாக தகவல் இல்லை. இந்த நிலையை மாற்றி தமிழ்நாடு லோக் ஆயுக்தாவை வலுப்படுத்த வேண்டும். கர்நாடகத்தில் இருப்பது போன்று தமிழ்நாட்டிலும் முதலமைச்சரை லோக் ஆயுக்தா அமைப்பின் விசாரணை வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், பதவி உயர்வு வாய்ப்புகளை பறிக்கும் அரசாணை எண் 243-ஐ ரத்து செய்ய வேண்டும் எனபன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்த டிட்டோஜாக்அடுத்தக்கட்டமாக செப்டம்பர் 29ம் தேதி முதல் அக்டோபர் 1&ஆம் தேதி வரை கோட்டை முற்றுகைப் போராட்டத்தையும் நடத்த முடிவு செய்திருந்தனர்.
இது தொடர்பாக அவர்களுக்கு சில நாட்களுக்கு முன் பேச்சு நடத்திய பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதை நம்பி ஆசிரியர்கள் கோட்டை முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டனர்.
ஆனால், இன்று வரை ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை. ஆசிரியர்களை ஏமாற்றாமல் அவர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.சென்னை அண்ணா நகரில் வசிக்கும் இரு ஐஏஎஸ் அதிகாரிகளில் வீடுகளில் வேலைகளை செய்வதற்காகவும், அவர்களின் வீடுகளில் உள்ள முதியோர்களை கவனித்துக் கொள்வதற்காகவும் சென்னை மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளர்களாக பணி செய்யும் 29 பேர், நகர்ப்புர தொடக்க சுகாதார நிலையங்களில் பணியாற்றும் 13 பேர் என 42 பேர் கட்டாயப்படுத்தி அனுப்பப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
மாநகராட்சிகளில் மக்களுக்கு பணியாற்றுவதற்காக மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் வழங்கி நியமிக்கப்படும் பணியாளர்களை அதிகாரிகள் தங்களின் சொந்தப் பணிக்கு பயன்படுத்திக் கொள்வது சட்டவிரோதம், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது ஆகும். இது தொடர்பாக விசாரணை நடத்தி மாநகராட்சி ஊழியர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் இரு ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அதற்கு துணை போன சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட பிற அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT