Published : 26 Sep 2024 01:09 PM
Last Updated : 26 Sep 2024 01:09 PM
சென்னை: சென்னையில் நேற்று இரவு (புதன்கிழமை) திடீர் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக, கொளத்தூர், ஆர்.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.
சென்னை, புறநகரில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. அவ்வப்போது லேசான மழை பெய்தாலும் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று காலை முதல் கடும் வெயில் வாட்டியது.பின்னர் இரவு 8.30 மணிக்கு மேல் லேசான சாரல் மழையாக தொடங்கி, பலத்த காற்றுடன் சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் கனமழையாக கொட்டித் தீர்த்தது.
இதன் காரணமாக, கோயம்பேடு சந்தை பகுதிகள், அண்ணாநகர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினர். அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் மாநகராட்சி பணியாளர்கள் வந்து, மரத்தை வெட்டி அகற்றினர். மேலும், மாநகரில் உள்ள பெரும்பாலான சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்கி, போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தியது.
எனினும் நள்ளிரவில் போக்குவரத்து குறைவாக இருந்ததால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. பின்னர் மாநகராட்சி நடவடிக்கையால் இன்று காலை அனைத்து சுரங்கப் பாலங்களிலும் மழைநீர் வெளியேற்றப்பட்டு, வழக்கமான போக்குவரத்து இருந்தது. நேற்று பெய்த மழையால் கொளத்தூர், ஆர்.கே.நகர், சூளை, வியாசர்பாடி பக்தவத்சலம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.
சில இடங்களில் கழிவுநீர் கலந்த மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.
இன்று காலை 8.30 மணி வரை பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக அம்பத்தூரில் 14 செ.மீ, அண்ணாநகர் மேற்கில் 12 செ.மீ, மணலி புதுநகரில் 10 செ.மீ, கத்திவாக்கம், பெரம்பூரில் தலா 9 செ.மீ, வடபழனி, புழல், கொளத்தூரில் தலா 8 செ.மீ, மாதவரத்தில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
புறநகர் பகுதிகளான திருவாலங்காடில் 11 செ.மீ, திருத்தணி, கேளம்பாக்கத்தில் தலா 6 செ.மீ, சோழவரத்தில் 5 செ.மீ, செம்பரம்பாக்கம், தாம்பரம், குன்றத்தூரில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
திடீர் மழைக்குக் காரணம் என்ன? இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் கூறியதாவது: ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலப்பகுதிக்கு வந்தது.
அதனால் தெற்கு ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளுக்கு நேற்று கனமழை எச்சரிக்கை கொடுத்திருந்தோம். இந்நிலையில், இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, மேற்கு மற்றும் தென்மேற்கு திசை காற்றை ஈர்த்தது. இதன் காரணமாக, ஆந்திர பகுதிகளில் பெய்ய வேண்டிய கனமழை சென்னையில் பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT