Published : 26 Sep 2024 11:29 AM
Last Updated : 26 Sep 2024 11:29 AM
மேட்டூர்: மேட்டூர் அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் வனத்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி நேற்றிரவு நேரில் ஆய்வு செய்தார்.
மேட்டூரை அடுத்த கொளத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியான தின்னப்பட்டி, வெள்ள கரட்டூர், புதுவேலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கால்நடைகளை சிறுத்தை வேட்டையாடி வருகிறது. இதுவரை 12 ஆடுகள், 3 கோழிகள், ஒரு நாய் ஆகியவற்றை வேட்டையாடி கொன்றுள்ளது.
இதையடுத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் 5 கூண்டுகள், 16 கண்காணிப்பு கேமராக்கள் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 3 வாரங்களாக கூண்டில் சிக்காமல் வனத்துறைக்கு போக்கு காட்டி வருகிறது அந்த சிறுத்தை. இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு வெள்ளகரட்டூர் பகுதியில் சரவணன் என்பவரின் 2 ஆடுகள் சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தது.
தொடர்ந்து சிறுத்தை தாக்கி கால்நடைகள் உயிரிழப்பதால் கோபமடைந்த மக்கள், கொளத்தூரில் உள்ள வனத்துறை சோதனை சாவடி முன்பு வனத்துறையை கண்டித்தது மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் மேட்டூர் அருகே தின்னப்பட்டி ஊராட்சி வெள்ள கரட்டூர், புதுவேலமங்கலம் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி நேற்றிரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சிறுத்தை நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வனத்துறையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். முன்னதாக, வனத்துறை சோதனைச் சாவடி உள்ள பகுதியில் அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பொதுமக்களிடம் பேசிய ஆட்சியர், “கரட்டுப் பகுதியில் ஆடுகள் மேய்ப்பதை தவிர்த்து வனத்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஆடுகளின் எண்ணிக்கை, ஆடு மேய்ப்பவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படும். குறிப்பிட்ட 4 அல்லது 5 இடங்களில் ஆடுகளை ஒன்றாகச் சேர்த்து வைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். ஆட்சியரின் இந்த ஆய்வின் போது, மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷஷாங் ரவி, உதவி வனப் பாதுகாவலர் செல்வகுமார், மேட்டூர் துணை ஆட்சியர் பொன்மணி, வட்டாட்சியர் ரமேஷ், வனச்சரக அலுவலர் சிவானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT