Published : 26 Sep 2024 06:13 AM
Last Updated : 26 Sep 2024 06:13 AM

அடித்தட்டு தொண்டர்களின் குரலாக ஆதவ் அர்ஜுனா: அடுத்தடுத்த சர்ச்சைக்கு இடையே விசிகவில் நடப்பது என்ன?

சென்னை: மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு தொடர்பான அறிவிப்பு வெளியானது முதல் அரசியல் வட்டாரத்தில் விசிக மீதான கவனம் அதிகரித்துள்ளது. சென்னை, அசோக் நகரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் மாநாடு தொடர்பாக விரிவான அறிவிப்பை வெளியிட்டபோது, அதிமுகவும் மாநாட்டில் பங்கேற்கலாம் என விசிக தலைவர் திருமாவளவன் சொன்னவுடன் பரபரப்பு மேலும் தொற்றிக் கொண்டது.

இதுதொடர்பான விவாதம் சற்று ஓய்ந்த நிலையில், திருமாவளவனின் சமூக வலைத்தள பக்கத்தில் காணொலி பதிவிட்டு நீக்கப்பட்டது அடுத்த சர்ச்சையாக உருவெடுத்தது. மறைமலை நகரில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு" என்னும் கருத்தை முன்வைத்து திருமாவளவன் பேசியிருந்தார். இதைத் தொடர்ந்து ஆட்சியில் விசிக பங்கு கேட்பதாக மீண்டும் விவாதம் தொடங்கியது.

ஆட்சியில் பங்கு என்பது விசிகவின் கோரிக்கைகளில் ஒன்று என திட்டவட்டமாக தெரிவித்த திருமாவளவன், முதல்வருடனான சந்திப்புக்குப் பிறகு கூட்டணியில் விரிசல் இல்லை எனவும் தெளிவுபடுத்தினார். இவையனைத்துக்கும் பின்னணியில் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா இருப்பதாகவே பேசப்பட்டது. கடந்த ஜனவரி 26-ம் தேதி, திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே நடைபெற்ற விசிகவின் மாநாட்டில் திருமாவளவன் முன்னிலையில் கட்சியில் இணைந்தவர் ஆதவ்அர்ஜுனா. அவர் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆவார்.

சிறுகனூர் மாநாடு உட்பட விசிகவின் அனைத்து செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக இருந்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக கட்சியில் இணைந்த ஒரு மாதத்துக்குள்ளாகவே அவருக்கு துணை பொதுச்செயலாளர் என்னும் முக்கிய பொறுப்பும் வழங்கப்பட்டது. இந்நிலையில், அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியே தற்போது விசிக மூத்த நிர்வாகிகள் மட்டுமின்றி, திமுகவினரையும் கொதிப்படையச் செய்துள்ளது. விசிக கூட்டணி இல்லாமல் வட மாவட்டங்களில் திமுக வெல்ல முடியாது என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை அவர் தெரிவிக்க, அதற்கு திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசாவும் பதிலடி கொடுக்க, அவருக்கு மீண்டும் மற்றொரு தனியார் தொலைக்காட்சியில் ஆதவ் அர்ஜுனா பதிலடி கொடுக்க என வார்த்தை போர் பூதாகரமாக வளர்ந்தது.

ஆதரவு, எதிர் கருத்துகள்: இதனால் கட்சிக்குள் இருந்தே ஆதவுக்கு எதிரான கருத்துகளை துரை.ரவிக்குமார் தொடங்கி பெரும்பாலான மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். ‘‘ஆதவ் அர்ஜுனாவின் கருத்து அரசியல் முதிர்ச்சியற்றது’’ என விசிக பொதுச்செயலாளர் துரை ரவிக்குமார், ‘‘உயிர் கரு வளர்ந்து குஞ்சு கண்விழிக்கும் போது முட்டை உடைத்தெறியப்படுவது இயற்கைதான்.

ஆனால், ஒருநாள் முன்னதாகவோ ஒருநாள் பின்னதாகவோ முட்டை உடைபட்டால் எல்லாம் பாழாகிவிடும்’’ என மற்றொரு பொதுச்செயலாளரான சிந்தனைச் செல்வனும் தெரிவித்திருந்தனர். அதேநேரம், திருமாவளவனின் ஆதரவில்லாமல் ஆதவ் இப்படி பேச முடியாது எனவும் விசிகவின் ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். அவர் அடித்தட்டு தொண்டனின் குரலாக ஒலிப்பதாக ஆதவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மாற்றம் வரலாம்: ஆனால், விசிக தலைமையோ கூட்டணியில் எவ்வித சிக்கலும் எழாது எனவும், மூத்த நிர்வாகிகளோடு ஆலோசித்து ஆதவ் மீதான நடவடிக்கை தொடர்பாக முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. எனினும், தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில், எவ்வித மாற்றமும் வரலாம் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x