Published : 26 Sep 2024 05:30 AM
Last Updated : 26 Sep 2024 05:30 AM

சென்னை மேயர் அலுவலகத்தில் நடந்தது என்ன? - டபேதாராக இருந்த மாதவி விளக்கம்

சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியாவுடன் வரும் பெண்டபேதார் மாதவி.

சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் அலுவலக பெண் டபேதார் மாதவி உதட்டுச்சாயம் பூசிக்கொண்டு பணிக்கு வந்ததால் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் பரவி வரும் நிலையில், அதை மேயர் அலுவலகம் மறுத்துள்ளது. ஆனால், சென்னை மேயர் அலுவலகம் மீது மாதவி சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இது குறித்து மாதவி கூறியது: “அண்மையில் என்னையும், சகபெண் ஊழியர்கள் சிலரையும், உதட்டுச்சாயம் பூசக்கூடாது என மேயர் அலுவலக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். உங்கள் உதட்டுச்சாயமும், மேயரின் உதட்டுச்சாயமும் சமமாக இருக்கிறது என தெரிவித்தனர். ``நான் சிறு வயது முதலே உதட்டுச்சாயம் பூசி வருகிறேன். என் நிறத்துக்கு ஏற்ற, பிடித்த நிறத்தில்தான் பூசுவேன். நான் வேலை சரியாக செய்கிறேனா என்பதை பாருங்கள். உதட்டு சாயத்தை பார்க்காதீர்கள்'' என்றேன்.

உள்ளே இருக்கும் ஊழியர்கள் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ள கூடாது. பக்கத்து பிரிவிலும் பேசிக்கொள்ள கூடாது என்கின்றனர். நான் பயன்படுத்த வேண்டிய கழிப்பிடம் சற்று தொலைவில் உள்ளது. அவ்வழியாக செல்லும்போது, எதிரில் வரும் பணியாளரிடம் பேசினால், அவரிடம் மேயர் அலுவலகத்தில் என்ன நடந்தது என தெரிவிக்கிறேனா என சந்தேகிக்கின்றனர்.

மேயர் எப்போது வரச்சொன்னாலும் வருவேன். பெருவெள்ளம் ஏற்பட்டபோது, ரிப்பன் மாளிகையிலேயே தங்கி இருக்கிறேன். என்னை சீக்கிரம் வீட்டுக்கு அனுப்புமாறு நான் ஒருநாளும் கேட்டதில்லை. ஒருநாள் உரிய நேரத்தில் பேருந்து கிடைக்காததால் பணிக்கு தாமதமாக வந்தேன். அந்த கேள்வியுடன் சேர்த்து 5 கேள்விகளை கேட்டு மெமோ கொடுத்தனர். அதற்கு உரிய பதிலை கொடுத்திருக்கிறேன். அதன் பின்னர் எனக்கு, மணலி மண்டல அலுவலகத்தில் பணியாற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது.

ஒரு மாதமாக மணலியில் பணியாற்றி வருகிறேன். ஆவடியில் இருந்து மணலிக்கு முறையான பேருந்து வசதி இல்லை. பணிக்காக சுமார் 70 கிமீ தினமும் பயணிக்கிறேன். எனக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் வீட்டுக்கு அருகில் மாற்றி இருக்கலாம். இதில் முதல்வர் தலையிட்டு தீர்வுகாண வேண்டும்” என்றார்.

முன்னதாக, ஆவடியை சேர்ந்த மாதவி (50) கடந்த 2009-ம் ஆண்டு அலுவலக உதவியாளராக சென்னை மாநகராட்சியில் பணியில் சேர்ந்தார். மாநகராட்சி மேயராக ஆர்.பிரியா பொறுப்பேற்ற பிறகு, அவரது டபேதாராக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவர் மாநகராட்சியின் முதல் பெண் டபேதாராவார். இவர் கடந்த மாதம் மணலி மண்டல அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதற்கு, அவர் உதட்டுச்சாயம் பூசி பணிக்கு வருவதுதான் காரணம் என தகவல் வெளியானது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், “டபேதாராக பணிபுரிந்துவந்தவரிடம் தனிப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எந்தவித விளக்கமும் கேட்கப்படவில்லை. விசாரணையும் நடத்தப்படவில்லை. நிர்வாக காரணங்களால் மட்டுமே பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x