Published : 25 Sep 2024 07:22 PM
Last Updated : 25 Sep 2024 07:22 PM
சென்னை: மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக, மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கொண்டுவந்த அரசாணையை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த மாற்றுத் திறனாளிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
வாகனங்களை உபயோகிக்கும் மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில், மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஒரு அரசாணை வெளியிட்டது. அதில், மாற்றுத் திறனாளிகளின் வாகனங்களுக்கு வரி சலுகை அளிக்கப் பட்டுள்ளது. சுங்கக் கட்டணம், சாலை வரியில் சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, வேறு ஒரு ஓட்டுநரை வைத்து இயக்கும் வகையில், சொந்த வாகனத்தை மாற்றுத்திறனாளிக்கான ‘திவ்யங்ஜன்’ வாகனமாக பதிவு செய்து கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக அரசு அமல்படுத்தாமல் இருக்கிறது. இந்நிலையில், இந்த அரசாணையை உடனடியாக அமல்படுத்த மாற்றுத் திறனாளிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது குறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க நிர்வாகி நம்புராஜன் கூறியதாவது: "மாற்றுத் திறனாளிகள் பயனடையும் வகையில், மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது. முன்பு, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனத்தை வைத்திருக்கும் மாற்றுத் திறனாளிகள் வரி சலுகை பெற முடியும். இந்த அரசாணை மூலமாக, கார் வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் சலுகை பெற முடியும். கட்டணமில்லா வசதி பெற முடியும்.
இந்த அரசாணையை அமல்படுத்தினால், பார்வை திறன் பாதிப்பு, மூளை வளர்ச்சி பாதிப்புள்ள மாற்றுத்திறனாளிகளும், வாகனங்களை சொந்தமாக இயக்க முடியாத மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற முடியாத கடுமையாக பாதித்த மாற்றுத்திறனாளிகளும் சாலை போக்குவரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக வழங்கப்படும் உரிமைகளையும் திட்டங்களையும் பெற முடியும். ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் தமிழக அரசும், போக்குவரத்து துறையும், இது குறித்து நடக்க நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. மாற்றுத் திறனாளிகள் நலத்துறையும் உரிய அழுத்தம் கொடுத்ததாக தகவல் இல்லை. ஆகவே, உடனடியாக இந்த அரசாணையை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்" என்று நம்புராஜன் கூறினார். இதே கோரிக்கையை தமிழக மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் சிம்மச் சந்திரனும் போக்குவரத்துத் துறை செயலர் பணீந்திர ரெட்டிக்கு முன் வைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT