Published : 25 Sep 2024 04:13 PM
Last Updated : 25 Sep 2024 04:13 PM
சென்னை: சிறப்பு திட்ட செயலாக்கத் துறை கண்காணிப்பு அதிகாரிகள் அரசியல் தலையீடு இல்லாமல் பணியாற்றும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாஜக வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் இன்று (செப்.25) வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் ஏழை மக்களுக்கான வீடு கட்டும் திட்டம், அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரமான குடிநீர் வழங்கும் திட்டம், இலவச கியாஸ் திட்டம், மகளிர், குழந்தைகளுக்கான திட்டங்கள், மருத்துவத் திட்டங்கள், முத்ரா வங்கி கடன் திட்டம், செல்வமகள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட ஏராளமான மத்திய அரசு திட்டங்கள் தமிழகத்தில் அடித்தட்டு மக்களைச் சென்றடையவில்லை.
இந்நிலையில், தமிழக அரசால் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை மூலமாக நியமிக்கப்படும் கண்காணிப்பு அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு மாதம் ஒரு முறை சென்று அங்கு செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் முருகானந்தம் தமிழக அரசின் வழக்கமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள தலைமைச் செயலாளர் முருகானந்தம், இந்த திட்டத்தை அறிவித்ததோடு கிடப்பில் போடாமல் தொடர்ந்து, திட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்டத் தலைவர்களுடன் மாதம் இருமுறை கலந்தாய்வு செய்ய வேண்டும். மாதாந்திர அறிக்கை மட்டுமன்றி அதிகாரிகள் நியமிக்கப்பட்டதற்கு பிறகு நடைபெற்ற முன்னேற்றம் மற்றும் மதிப்பீடு குறித்தும் ஆய்வு செய்து வழிகாட்டலை வழங்க வேண்டும்.
மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு திட்டங்களுக்கான கண்காணிப்பு அதிகாரிகள், மாவட்ட வளர்ச்சிப் பணிகள், மத்திய மாநில அரசின் மக்கள் நல திட்டங்கள் உள்ளிட்ட சிறப்பு திட்டங்களை முழுமையாக அறிந்து கொண்டு, விளிம்பு நிலையில் உள்ள கிராமப்புற, ஏழை நடுத்தர மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அரசியல் தலையீடு இல்லாமல் பணியாற்றுவதற்கான சூழ்நிலையை தமிழக அரசு உருவாக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT