Published : 25 Sep 2024 02:51 PM
Last Updated : 25 Sep 2024 02:51 PM

“முதல்வர் டெல்லி சென்று திரும்பியதும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் சில நிறைவேற்றப்படும்” - அன்பில் மகேஸ்

அமைச்சர் அன்பில் மகேஸ்

திருச்சி: முதல்வர் டெல்லி சென்று வந்த பின்னர் ஆசிரியர்களின் கோரிக்கைகளில் சில நிறைவேற்றப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

திருச்சி சந்திரம் பேருந்து நிலையத்தில் வட்டப் பேருந்து சேவையை புதன்கிழமை தொடக்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது; சென்னைக்கு அடுத்ததாக திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்கள் வளர்ச்சி பெற்றுள்ளன. குறிப்பாக, திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், சர்வதேச விமான நிலையம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

எனவே, திருச்சியை தலைநகராகக் கொண்டு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கோட்டத்தை அமைக்க வேண்டும் என இங்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவும் இது தொடர்பாக பேசி வருகிறார். இதில் நிர்வாக ரீதியாக என்ன பிரச்சினை இருக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. இந்த விஷயம் தொடர்பாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

காலாண்டு தேர்வு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். விடுமுறை நாட்கள் குறைவாக இருப்பதால் விடைத்தாள் திருத்தும் பணி உள்ளிட்ட பணிகளைச் செய்ய போதிய அவகாசம் இல்லை என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிகாரிகளுடன் பேசிவிட்டோம். இது தொடர்பான அறிவிப்பு இன்று வரும்.

ஆசிரியர்களின் 31 கோரிக்கைகளில் 12 கோரிக்கைகளை நாங்கள் செய்து தருவதாக சொல்லியிருக்கிறோம். அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் சில கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுள்ளனர். தமிழக முதல்வர் படிப்படியாக கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார். தமிழக முதல்வர் செப்.27-ம் தேதி பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார்.

அப்போது பள்ளிக் கல்வித் துறைக்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய நிதியை கேட்பதற்காக நாங்களும் செல்கிறோம். டிட்டோ ஜாக் அமைப்பினர் தங்களது உரிமைகளுக்காக உணர்வுகளை வெளிப்படுத்தினாலும், இந்த நேரத்தில் நாங்கள் தமிழக முதல்வரின் பக்கம் நிற்போம், அவரது கரத்தை வலுப்படுத்துவோம் என்று கூறி, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக ரூ.2,500 கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என தெரிவித்து, தங்களது போராட்டத்தை ஒத்திவைத்துள்ளனர்.

தமிழக முதல்வர் டெல்லி சென்று வந்த பிறகு, ஆசிரியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் ஒன்றிரண்டை செய்து தர தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வருவதற்கு திமுக கூட்டணிக் கட்சிகளுக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு, “அது தனிப்பட்ட நபரின் கருத்து. அது முதிர்ச்சியற்ற கருத்து என அவர்களது தலைமையே தெரிவித்துள்ளது. இதில் நாங்கள் சொல்ல ஒன்றுமில்லை. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x