Published : 25 Sep 2024 01:57 PM
Last Updated : 25 Sep 2024 01:57 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் சேர 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதனை பொறியியல் உள்ளிட்ட மற்ற படிப்புகளுக்கும் வழங்க அரசு முயற்சித்து வருவதாக முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி இந்திரா நகரில் உள்ள இந்திரா காந்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா இன்று கொண்டாடப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதல்வர் ரங்கசாமி கூறியதாவது: நடுத்தர பள்ளியாக இருந்த இப்பள்ளியை தரம் உயர்த்திய ஆசிரியர்களை பாராட்ட வேண்டும். இங்குள்ள ஆசிரியர்கள், மாணவர்களை பொதுத் தேர்வுகளில் 90 சதவீதம் வெற்றிபெறச் செய்துள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றிகளை குவித்துள்ளனர். ஆசிரியர்கள் முயற்சி செய்தால் மாணவர்களை கல்வியாளராக, படைப்பாளிகளாக, சாதனையாளராக உருவாக்க முடியும். அரசுப் பள்ளிகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் தகுதியின் அடிப்படையில் அமர்த்தப்படுகின்றனர்.
இதனால் அவர்கள் பாடம் கற்பிப்பது சிறப்பாக இருக்கும். எப்படிச் சொல்லிக் கொடுத்தால் மாணவர்களுக்கு எளிதாக புரியும் என்று தெரிந்து கொண்டு அது போன்று ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கின்றனர். பள்ளிப் படிப்பின் போது ஆசிரியர்களின் பங்கு மிகப்பெரியது. பள்ளிக்கூடங்கள் நல்ல நண்பனை உருவாக்குகிறது. நம்மை வளர்ப்பது பள்ளிக்கூடம் தான். பெற்றோர்கள் தன் பிள்ளைகள் நன்றாக வர வேண்டும் என்று எண்ணுகின்றனர். அதற்கு அடிப்படை கல்வி மிகவும் முக்கியமானது.
ஆகையால் தான் பள்ளிக் கல்விக்கு அதிக நிதியை ஒதுக்குகிறோம். ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கின்றனர். இந்த பருவத்தில் மாணவர்கள் எந்த சிந்தனையும் வைத்துக்கொள்ளக்கூடாது. புதிய தொழில் நுட்பங்கள் மூலமாக கல்வி கற்பிக்க மாணவர்களுக்கு லேப் டாப் வழங்கப்படுகிறது. இதேபோன்று 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நவீன தொழில் நுட்பம் மூலம் பாடம் கற்பிக்க டேப்லெட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க காலி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. விரைவில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் இந்த ஆண்டு இந்தப் பள்ளியின் தேர்ச்சி விகிதம் 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக மாற வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் சேர 10 சதவீதம் இட ஒதுக்கீடு தற்போது வழங்கப்படுகிறது. இதனை பொறியியல் உள்ளிட்ட மற்ற படிப்புகளுக்கும் வழங்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.” என்று முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், பள்ளி முதல்வர் சந்திரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும், நிகழ்ச்சி நிறைவாக, மாணவர்கள் பங்குபெற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT