Published : 25 Sep 2024 01:43 PM
Last Updated : 25 Sep 2024 01:43 PM
சென்னை: “வெள்ளை காகிதத்தில் உண்மைத் தன்மை இல்லாமல், மக்களை ஏமாற்றும் விதமாக அமைச்சர் ராஜா வெளியிட்ட கடிதத்தை, இதுதான் வெள்ளை அறிக்கை என்று சொல்லும் ஒரு முதல்வரைப் பெற்றிருக்கிறோம். தொழில் துறை அமைச்சர் விதண்டாவாதமான பேச்சைப் பேசாமல், திமுக அரசு ஈர்த்த தொழில் முதலீடுகள் பற்றிய ஒரு விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடும்பத்தோடு சுற்றுலா சென்று பல ஆயிரம் கோடி ரூபாய் கணக்கில் முதலீடுகளை ஈர்த்தேன் என்றும், அதிமுக ஆட்சிக் காலத்தில் பெறப்பட்ட அந்நிய முதலீடுகளில் 10 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை என்றும், முதல்வர் மு.க. ஸ்டாலின் மனம்போன போக்கில் உளறியதற்கு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதாரங்களுடன் பதில் அளித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில், 40 மாதகால திமுக ஆட்சியில் நான்கு முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் போட்ட ஒப்பந்தங்களின் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா என்று சவால் விட்டார்.
இதற்கு பதிலளிக்க நிர்வாகத் திறனற்ற முதல்வர், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவை விட்டு பிரச்சினையை திசை திருப்பும் வகையில் மழுப்பல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதுவரை 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலாக முதலீட்டினை ஈர்த்துள்ளதாகக் கூறும் திமுக அரசு, எந்தெந்த நிறுவனங்கள், எவ்வளவு முதலீட்டில், எந்தெந்த இடங்களில் தொழிற்சாலைகளை துவங்கியுள்ளன? எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது? போன்ற விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டியதுதானே. எந்த விவரத்தையும் தெரிந்துகொள்ளாமல் அறிக்கை வெளியிட்டுள்ள தொழில் துறை அமைச்சர் ராஜாவிடம் நான் கேட்கிறேன்?
செமி கண்டக்டர் தயாரிக்கும் நிறுவனங்களை ஏன் இதுவரை தமிழகத்தில் முதலீடு செய்ய அழைத்து வரவில்லை? ஆசியாவின் டெட்ராயிட் என்று சென்னை அழைக்கப்படுவதற்கான காரணம், இங்கு அதிக அளவில் கார் தொழிற்சாலைகள் அமைந்துள்ளதால்தான். கார் தயாரிப்பில் செமி கண்டக்டர்கள் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்று. அவ்வாறு இருக்கும் நிலையில் தமிழகத்தில்தான் முதன்முதலில் செமி கண்டக்டர் தயாரிப்பு நிறுவனத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும். இந்த திமுக அரசு தூங்கிக்கொண்டு இருந்ததால், தமிழகத்தில் முதலீடு செய்ய இருந்த செமி கண்டக்டர் தயாரிக்கும் நிறுவனமான ஃபாக்ஸ்கான் தற்போது 2 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் குஜராத்தில் தொழிற்சாலையைத் துவங்கி உள்ளது. தற்போது மீண்டும் செமி கண்டக்டர் தொழிற்சாலைகளை அமைக்க திமுக அரசு அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறுவது, தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பதாகும்.
கைப்பேசி பாகங்களை தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தாய் வீடு சென்னையாக இருக்கும் நிலையில், அந்நிறுவனம் கர்நாடகாவிலும், தெலங்கானாவிலும் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் புதிய தொழிற்சாலை அமைக்க உள்ளது. திமுக அரசின் கையாலாகாத்தனத்தால் அந்த நிறுவனம் அண்டை மாநிலங்களுக்குச் சென்றுவிட்டது. தமிழகத்திலேயே இந்த முதலீடுகளை ஈர்த்திருக்க வேண்டாமா?
இதுபோல திமுக அரசின் சறுக்கல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.மெட்ரோ ரயிலுக்கான இன்ஜின் மற்றும் பெட்டிகள் தயாரித்து வழங்கும் ALSTOM நிறுவனம் தமிழகத்தைத் தவிர்த்துவிட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டி-க்கு முந்தைய (2006-2011) திமுக ஆட்சியில் சென்றதற்கான காரணத்தை ராஜாவால் விளக்க முடியுமா?
காட்பரிஸ் பன்னாட்டு மிட்டாய் நிறுவனம் தமிழகத்தில் தொழில் துவங்க முயற்சி செய்து பின்னர் திமுக அரசின் ஆதரவு இல்லாத நிலையில் ஸ்ரீசிட்டி-ல் தொழிற்சாலையைத் துவங்கியது.கியா மோட்டார் நிறுவனம் வெளி மாநிலத்தில் தொழில் துவங்கியது குறித்து அதிமுக அரசு மீது திமுக சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு எங்கள் ஆட்சியில் பலமுறை சட்டமன்றத்தில் நாங்கள் பதில் அளித்துள்ளோம். கியா நிறுவனம், ஹூண்டாய் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். கியா மற்றும் ஹூண்டாய் ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஒரே இடத்தில் செயல்படக்கூடாது என்பது அந்நிறுவனத்தின் கொள்கையாகும். எனவேதான், கியா மோட்டார் நிறுவனம் சென்னையில் அமையவில்லை.
ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ்-உடன் ஒப்பந்தம் பற்றி மந்திரி ராஜா குறிப்பிட்டுள்ளார். 2019-ம் ஆண்டு வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது அமெரிக்காவில், நியூயார்க் நகரில் இந்நிறுவனத்துடன் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் Facilitation MOU போடப்பட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தமிழகம் பெறப்போகும் முதலீட்டுத் தொகையை எடப்பாடி பழனிசாமி ஈர்த்த வெளிநாட்டுப் பயண முதலீட்டுடன் சேர்க்காமல், உண்மையான 8,835 கோடி மட்டுமே குறிப்பிட்டோம்.
இந்நிறுவனத்தை கடலூரில் இயங்காமல் இருந்த NOCL–இடத்தில் ஆரம்பிக்க இந்த MOU போடப்பட்டது. NOCL–நிறுவனம், உங்கள் மாவட்ட வேளாண் துறை அமைச்சர் தொகுதியில்தான் உள்ளது. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு இந்நிறுவனத்தை ஆரம்பித்திருக்க வேண்டியது நீங்கள்தான். இந்நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை கைவிட்டதன் மூலம், மிகப் பெரும் அளவில் பயனடைந்திருக்க வேண்டிய கடலூர் மாவட்ட இளைஞர்களின் நிலையை மாற்றத் தவறியது உங்கள் திமுக அரசுதான். இதில், உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், எங்கள் ஆட்சியில் தொழில் துறைச் செயலாளராக இருந்து, தற்போது தலைமைச் செயலாளராக பதவி வகித்து வரும் அதிகாரியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
எங்களது ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட முதலீடுகள் குறித்தும், இன்றைக்கு இந்த திமுக அரசின் முக்கிய பதவிகளில் இருக்கும் அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளும்படி எடப்பாடி பழனிசாமி தெளிவாக தெரிவித்த பின்னரும், அதைச் செய்யாமல் அமைச்சர் ராஜா வெளியிட்ட முழுமையான புள்ளி விவரங்கள் இல்லாத, வெற்றுத் தகவல்கள் அடங்கிய பதிலை வெள்ளை அறிக்கை என்று முதல்வர் ஸ்டாலின் சப்பைக் கட்டு கட்டுகிறார்.
1996-2001 காலகட்டத்தில் நடைபெற்ற திமுக ஆட்சியில், தமிழக அரசின் கஜானாவையும், களஞ்சியத்தையும் திமுக அரசு காலி செய்துவிட்டதென்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்கள். அவரது குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் 2001-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், தமிழக சட்டசபையில் திமுக ஆட்சியில் தமிழக அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். ஐந்தாண்டு காலத்தில் கருணாநிதி தலைமையிலான அரசு பெற்ற கடன்களின் அளவு, ஊதாரித்தனமாக செய்யப்பட்ட செலவு போன்றவைகளை பட்டியலிட்டு, திமுக அரசின் கையாலாகாத்தனத்தை தோலுரித்துக் காட்டினார்.
பள்ளி படிக்கும் மாணவர்கள்கூட எளிதில் புரிந்துகொள்ளும்படி வெளிப்படைத் தன்மையுடன் ஜெயலலிதா வெளியிட்டதுதான் வெள்ளை அறிக்கை. ஆனால், இன்றைய தினம் வெள்ளை காகிதத்தில் உண்மைத் தன்மை இல்லாமல், மக்களை ஏமாற்றும் விதமாக அமைச்சர் ராஜா வெளியிட்ட கடிதத்தை, இதுதான் வெள்ளை அறிக்கை என்று சொல்லும் ஒரு முதல்வரைப் பெற்றிருக்கிறோம். தொழில் துறை அமைச்சர் விதண்டாவாதமான பேச்சைப் பேசாமல், திமுக அரசு ஈர்த்த தொழில் முதலீடுகள் பற்றிய ஒரு விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.
இல்லாவிடில், இந்த திமுக ஆட்சியில், தொழில் துறையில் தற்போது செய்துவரும் கோல்மால்களையும், ஏமாற்று வித்தைகளையும் தோலுரித்துக் காட்டும் வகையில், 2026-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைய இருக்கும் ஆட்சியில் உண்மையான வெள்ளை அறிக்கையை, அதிமுக அரசு வெளியிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT