Published : 25 Sep 2024 01:00 PM
Last Updated : 25 Sep 2024 01:00 PM
அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் வளர்ச்சித்திட்ட பணிகள் தொடக்க நிகழ்ச்சி இன்று (செப்.25) காலை தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்று, கட்டையன்குடிக்காடு கிராமத்தில் ரூ.16.75 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கான பணியை தொடங்கி வைத்து, செந்துறையில் ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ரேஷன் கடையை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்த அமைச்சர், “ரூ.4.96 லட்சத்தில் இருளர் காலனி முதல் தெருவில் சிமென்ட் சாலை, ரூ.4.50 லட்சம் மதிப்பில் இருளர் காலனி இரண்டாவது தெருவில் சிமென்ட் சாலை, ரூ.4.15 லட்சத்தில் 3வது தெருவிலும், ரூ.3.84 லட்சம் மதிப்பீட்டில் 4-வது தெருவிலும், ரூ.3.41 லட்சத்தில் 5-வது தெருவிலும் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர், சேடக்குடிகாடு கிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ரேஷன் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். தொடர்ந்து, உஞ்சினி கிராமத்தில் ரூ.8.04 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கும் பணியை தொடங்கி வைத்து, ரூ.12 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடையை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, ரூ.13.56 லட்சம் மதிப்பில் உணவு தானிய சேமிப்பு கிடக்கு கட்ட பூமி பூஜையை செய்து வைத்து, ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கினார். பின்னர், இரும்புலிக் குறிச்சி கிராமத்தில் ரூ.89.64 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணி, ரூ.13.56 லட்சத்தில் உணவு தானிய சேமிப்பு கிடங்கு கட்டும் பணி, குமிழியம் கிராமத்தில் ரூ.1.48 கோடி மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி, பாளையக்குடி கிராமத்தில் ரூ.1.37 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, பெரிய ஆனந்தவாடி மற்றும் சின்ன ஆனந்தவாடி கிராமங்களில் தலா ரூ.9.50 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டட பணியை தொடங்கி வைக்கிறார்.
இதனிடையே, அமைச்சர் கலந்துகொண்டு வளர்ச்சித்திட்ட பணிகள் தொடக்க நிகழ்ச்சிகளில், ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.கவிதா, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, செந்துறை வட்டாட்சியர் வேலுமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், ஜாகிர் உசேன் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT