Published : 25 Sep 2024 12:51 PM
Last Updated : 25 Sep 2024 12:51 PM

உலக மருந்தாளுநர் தினத்தை முன்னிட்டு உதகையில் விழிப்புணர்வு பேரணி 

உதகை: உலக மருந்தாளுநர் தினத்தை முன்னிட்டு உதகை ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி, இந்தியன் பார்மசூட்டிகள் அசோசியேஷன் சார்பில் உலக மருந்தாளுநர் தின விழிப்புணர்வு பேரணி இன்று (செப்.25) உதகையில் நடைபெற்றது.

இன்று உலக மருந்தாளுநர் தினம். துருக்கி நாட்டு இஸ்தான்புல்லில் கூடிய உலக மருந்தியல் கூட்டமைப்புப் பேரவையானது, செப்டம்பர் 25-ம் தேதியை சர்வதேச மருந்தாளுநர் தினமாக அறிவித்தது. உலகில் உள்ள மக்களின் உடல் நலத்தை மேம்படுத்துவதில் மருந்தாளுநர்களுக்குரிய பங்கை ஊக்கப்படுத்தி, எடுத்துரைக்கும் விதமாக நிகழ்ச்சிகளை ஒருங்கமைப்பது, மக்கள் ஆரோக்கியத்திற்கு மருந்தாளுநர்கள் வழங்கும் சேவைகளை அங்கீகரிப்பது போன்றவற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு இந்த சிறப்பு தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி நீலகிரி மாவட்டம் உதகை ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியில் இன்று மருந்தாளுநர் தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.பி.தனபால் தலைமையில் நடைபெற்ற நிகழ்சியில் இந்தியன் பார்மசூட்டிகல் அசோசியேஷன் நீலகிரி கிளையின் தலைவர் முனைவர் வடிவேல் வரவேற்புரை மற்றும் விளக்க உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.பி.தனபால் பேசும்போது, ''மருத்துவத்தில் மருத்துவருக்கும், மருந்தாளுநர்களுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு. ஏனெனில், மருந்தாளுநர் இல்லையேல் மருந்தியல் இல்லை; மருந்தியல் இல்லையேல் மருத்துவம் இல்லை. இன்றைய காலகட்டத்தில் உணவுக்கு இணையான பங்கு மருந்துக்கும் உள்ளது எனில் மருந்தும் மருந்தாளுநர்களும் பிரிக்க முடியாத சக்திகளாகவே உணரமுடிகிறது. மருந்தாளுநர்கள் மக்களுக்கு மருந்து அளிப்பதை சேவையாக கொண்டு பணியாற்றி வருகின்றனர் அத்தியாவசியமான பொறுப்பு மருந்தாளுநர்களுடையது.”என்றார்.

தொடர்ந்து ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி பேராசிரியர்கள் இணைந்து உறுதி மொழியேற்றனர். இதைத் தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியை கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.பி.தனபால் தொடங்கி வைத்தார். பேரணியானது ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியில் தொடங்கி சேரிங்கிராஸ், காபிஹவுஸ் சதுக்கம், ஏ.டி.சி வழியாகச் சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது.

உலக மருந்தாளுநர் தினத்தையொட்டி பேராசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்களுக்கு மருந்துகள் உட்கொள்வது குறித்த கையேடுகளை உதகை நகர பகுதிகளில் வழங்கினர். இந்தியன் பார்மசூட்டிகல் அசோசியேஷன் நீலகிரி கிளை செயலாளர் முனைவர் கனேஷ் சங்க செயல்பாடுகள் கூறித்து விரிவாக எடுத்துரைத்தார். சங்க பொருளாளர் முனைவர் காளிராஜன் நன்றி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x