Published : 25 Sep 2024 12:27 PM
Last Updated : 25 Sep 2024 12:27 PM
திருநெல்வேலி: “தமிழக ஆளுநர் கோட்சேவின் பார்வையில் உள்ளார். தொடர்ந்து இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக பேசி வருகிறார். ஆளுநர் இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 15 மற்றும் 17-ஐ படித்துவிட்டு பேசவேண்டும்.” என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் கால்வாயில் ஆண்டுதோறும் ஜூன் 15-ம் தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறப்பது வழக்கம். கடந்தாண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின் காரணமாக, தோவாளை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் அவை சரி செய்யப்பட்டு இன்று (செப்.25) தோவாளை கால்வாய் நிலப்பாறை என்ற இடத்திலிருந்து ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.இதன்படி, தினசரி 150 கன அடி வீதம் 138 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசாணை வெளியிடப்பட்டு அதன்படி இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.
இதன் மூலம் ராதாபுரம் தாலுகாவில் உள்ள 52 குளங்கள் மூலம் 17 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். மேலும், ராதாபுரம் கால்வாய் செல்லும் சுமார் நூற்றுக்கணக்கான கிராம பகுதிகளில் குடிநீர் ஆதாரமாகவும் இந்த ராதாபுரம் கால்வாய் இருந்து வருகிறது. ராதாபுரம் கால்வாயில் சபாநாயகர் அப்பாவு மற்றும் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் ஆகியோர் தண்ணீரை திறந்து விட்டனர்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “ராதாபுரம் கால்வாய் பாசனத்தில் உள்ள 52 குளங்களும் நிரப்பப்படும் இதற்காக அதன் மடைகளை கண்காணிக்கவும் சீராக தண்ணீர் திறந்து விடவும் ஐந்து லஸ்கர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்,” என்றார்.
மதச்சார்பின்மை ஐரோப்பாவில் உருவான சித்தாந்தம் எனவும் பாரதம், இந்து தர்மம் இரண்டையும் பிரிக்க முடியாது என்றும் பாரதம் இந்து தர்மத்தின் அடிப்படையில் செயல்படுவதால் மதச்சார்பின்மை இங்கு தேவை இல்லை என ஆளுநர் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அப்பாவு, “இந்தியா என்பது ஒரு மதச்சார்பற்ற நாடு. இங்கு சாதி மதம், பிறப்பு அடிப்படையில் எந்த வேறுபாடும் காட்டக்கூடாது என்பதையே நமது இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 15 மற்றும் 17 கூறுகிறது.
ஆளுநர் கோட்சேவின் பார்வையில் உள்ளார். தொடர்ந்து இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிராக பேசுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக, இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 15 மற்றும் 17-ஐ படித்துவிட்டு அவர் பேச வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT