Published : 24 Sep 2024 08:21 PM
Last Updated : 24 Sep 2024 08:21 PM

முறைகேடு புகார்: உதகை ஆதரவற்றோர் காப்பகத்தில் கோட்டாட்சியர் விசாரணை

உதகை ஆதரவற்றோர் காப்பகம்

உதகை: உதகை அருகே செயல்பட்டு வரும் பிரபல தனியார் ஆதரவற்றோர் காப்பகத்தில், ஆட்சியர் உத்தரவின் பேரில் கோட்டாட்சியர் தலைமையில் இன்று (செப்.24) விசாரணை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள முள்ளிக்கொரை பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ், அப்துல் கலாம் ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில், ஆதரவற்ரோர், குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள் என 54 ஆண்கள் 33 பெண்கள் உட்பட 87 பேர் உள்ளனர். இந்த காப்பகத்துக்கு நகராட்சி மூலம் மாதந்தோறும் ரூ.40 ஆயிரம் நிதி உதவியும் வழங்கப்பட்டு வருவதுடன் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், வசதி படைத்தவர்கள் சார்பாகவும் பொருளுதவி மற்றும் பண உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த சில மாதங்களாகவே இந்த காப்பகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார் எழுந்தன. அது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி செல்வம் என்பவர், அப்துல் கலாம் காப்பகத்தில் முறைகேடாக பணம் வசூலிக்கப்படுகிறது. அங்குள்ள முதியவர்கள் தாக்கப்பட்டு, சொத்துகள் பறிமுதல் செய்யப்படுகிறது என்று கூறி, மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.இந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க 3 நபர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் விசாரித்து ஒரு வார காலத்தில் அறிக்கை அளிப்பார்கள். அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிவித்தார்.இந்நிலையில், ஆட்சியர் உத்தரவின் பேரில் கோட்டாட்சியர் மகாராஜ், நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா, தனி வட்டாட்சியர் சங்கீதா ராணி தலைமையிலான குழுவினர் அப்துல் கலாம் ஆதரவற்றோர் காப்பகத்தில் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது குற்றச்சாட்டுகள் குறித்து நிர்வாகி தஸ்தகீரிடம் பல்வேறு விளக்கங்களை கேட்டறிந்தனர். மேலும், அவர் கொடுத்த ஆவணங்களையும் சோதனை செய்தனர். சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்றது. இதுகுறித்து கோட்டாட்சியர் மகாராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: “உதகை நகராட்சி பகுதியில் இயங்கி வரும் அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில் முறைகேடுகள் நடப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு புகார் வந்தது.

இதன் அடிப்படையில் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையர், மாவட்ட சமூக நல அலுவலர் ஆகியோர் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டார். அதன் பேரில் இன்று இந்த இல்லத்தில் நேரடி விசாரணை நடத்தப்பட்டது. இங்கு தங்கி இருப்பவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதேபோல் குறிப்பிட்ட சில புகார்கள் குறித்து நிர்வாகிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இது குறித்தான அறிக்கை இன்னும் இரண்டு நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x