Published : 24 Sep 2024 08:17 PM
Last Updated : 24 Sep 2024 08:17 PM
மதுரை: ராமேஸ்வரம் பேக்கரும்பில் அப்துல் கலாம் நினைவிடத்துக்கு கூடுதல் இடம் ஒதுக்கி தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
ராமநாதபுரம் பேக்கரும்பு பகுதியைச் சேர்ந்த சிவராமகிருஷ்ணன் உட்பட பலர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: “பாம்பன் கிராமம் பேக்கரும்பில் மயானமாக வகைப்படுத்தப்பட்டுள்ள இடத்தின் ஒரு பகுதியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடம் அமைந்துள்ளது. எஞ்சிய இடத்தை மக்கள் அடக்க ஸ்தலமாக பயன்படுத்தி வருகின்றனர். இங்கு மாடசாமி கோயில் மற்றும் தெப்பக்குளம், சுனாமி குடியிருப்பு, சமுதாய கூடம் ஆகிய அமைந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஜூன் முதல் வாரத்தில் வருவாய்த்துறையினர் மாடசாமி கோயிலை அகற்ற முயன்றனர். அதிகாரிகளிடம் கேட்டதற்கு மயானம் என வகைப்படுத்தப்பட்ட மொத்த இடமும், அரசு புறம்போக்கு தரிசு என வகை மாற்றம் செய்து அப்துல் கலாம் நினைவிடத்துக்காக மத்திய அரசிடம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இது தொடர்பாக தமிழக அரசு 8.12.2016-ல் அரசாணை பிறப்பித்திருப்பது தெரியவந்தது. எஞ்சிய இடத்தை கலாம் நினைவிடத்துக்கு வழங்க பாம்பன் கிராம மக்கள் ஒப்புதல் அளித்திருப்பதாகவும், தங்கச்சிமடம் ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாகவும் வருவாய் அதிகாரிகள் அரசுக்கு பொய்யான அறிக்கை அளித்துள்ளனர்.
அந்த அறிக்கை அடிப்படையில் அந்த இடத்தை அப்துல்கலாம் நினைவிடத்துக்கு ஒதுக்கி அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. எனவே, அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். அதுவரை அரசாணையை செயல்படுத்தவும், மயானத்தையும், வண்டிப்பாதை மக்கள் பயன்படுத்த தடை விதிக்கக்கூடாது என்றும், அங்குள்ள கோயில், தகன மேடையை சேதப்படுத்தக்கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சுந்தர்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
பின்னர் நீதிபதிகள், அப்துல் கலாம் நினைவிடத்திற்கு இடம் ஒதுக்கும் போது அப்பகுதியிலுள்ள மாடசாமி கோயில், தெப்பக்குளம், சுனாமி குடியிருப்பு, சமுதாய கூடம் ஆகியவற்றை இணைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மனு தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT