Last Updated : 24 Sep, 2024 04:33 PM

 

Published : 24 Sep 2024 04:33 PM
Last Updated : 24 Sep 2024 04:33 PM

செப்.26-ல் சிஎஸ்ஐஆர் ஆய்வகங்களை பொதுமக்கள் நேரில் பார்வையிட அழைப்பு!

சென்னை: சிஎஸ்ஐஆர் - கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் நிறுவன நாளை முன்னிட்டு பொதுமக்கள் அதன் ஆய்வகங்களை இலவசமாக நேரில் பார்வையிடலாம் என அதன் இயக்குநர் என்.ஆனந்தவல்லி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ''சிஎஸ்ஐஆர் - கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் கடந்த 1942-ம் ஆண்டு செப்.26-ம் தேதி தொடங்கப்பட்டது. தொழில்துறைக்கு தேவையான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக இந்த ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்டது. இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் செப்.26-ம் தேதி சிஎஸ்ஐஆர் நிறுவன தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் இளைய தலைமுறையினர், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் நாட்டில் உள்ள அனைத்து சிஎஸ்ஐஆர் ஆய்வகங்களும் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படும்.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஆராய்ச்சி என்பது எவ்வளவு முக்கியம் என்பதை மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இந்நிகழ்வு நடத்தப்படுகிறது. அதன்படி சென்னை தரமணியில் உள்ள சிஎஸ்ஐஆர் வளாகம், சிஎஸ்ஐஆர் - சென்னை வளாகம் ஆகியவை செப். 26 காலை 9.30 மணியில் இருந்து மதியம் 2.30 மணி வரை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்படும். ஆர்வமுள்ள இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் சிஎஸ்ஐஆர் ஆய்வகங்களை பார்வையிட்டு பயன்பெறலாம்.

சிஎஸ்ஐஆர் - சென்னை வளாகத்தில் மத்திய மின் வேதியியல் நிறுவனம், தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனம், மத்திய அறிவியல் இயந்திரங்களின் அமைப்பு, தேசிய உலோகவியல் ஆய்வகம், மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் கீழ் செயல்படும் 5 ஆய்வகங்கள் இயங்கி வருகின்றன. இந்த ஆய்வகங்களின் தலைமையகம் வெவ்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மண்டல அளவில் பல்வேறு வகையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இவ்வாறு அவை அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மைய வளாகத்தில் மொத்தம் 10 ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. மொத்தம் 85 கட்டமைப்பு பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த வளாகங்களில் அமைந்திருக்கும் ஒவ்வொரு ஆய்வகத்துக்கும் ஒவ்வொரு வரலாறு இருக்கும். உலகளவில் சிக்கலான கட்டுமான ஆராய்ச்சிகள், ஒரு கட்டிடத்தின் பராமரிப்பு, நிலநடுக்கம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களில் எதிர்கொள்வது போன்ற பலவகை ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, இதிலிருந்து மாணவர்கள் ஆராய்ச்சிகளின் முக்கியத்துவத்தையும், அதன் பயன்பாடுகளை கற்றுக்கொள்ளலாம்'' என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x