Published : 24 Sep 2024 02:45 PM
Last Updated : 24 Sep 2024 02:45 PM

மூடப்படும் டாஸ்மாக் கடைகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்: ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி தகவல்

ஈரோடு: தமிழகத்தில் மூடப்படவுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் மூடப்படும் கடைகள் பட்டியல் வெளியிடப்படும் என வீட்டு வசதி மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி கூறியுள்ளார்.

ஈரோடு முத்தம்பாளையம் பகுதியில் பெரும்பள்ளம் ஓடையில் ஆகாயத் தாமரையை அகற்றும் பணியை தொடங்கி வைத்த பின், வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்பதில், எங்களுக்கு கொள்கை ரீதியாக மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால், ஒரே நாளில் மதுக்கடைகளை மூடினால், மிகப் பெரிய பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டி வரும். எனவே படிப்படியாக மதுக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓர் இடத்தில், மதுக்கடையை மூடினால், அங்கு தவறு நடக்குமா என்று பார்க்க வேண்டியுள்ளது. மதுக்கடையை மூடினால் அங்கு வசிப்பவர்கள் குடிப்பதை நிறுத்தி விடுகின்றனர் என்று சொல்லி விட முடியாது. மதுக்கடைகளை மூடும் போது, அவர்களை அந்த பழக்கத்தில் இருந்து வெளியேற்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். டாஸ்மாக் மதுக்கடைகள் குறித்து கணக்கெடுத்தால், அது, விற்பனையை அதிகரிப்பதற்காக என்று தவறாக நினைக்கின்றனர்.

டாஸ்மாக் கடைகளில் தவறு ஏதேனும் நடக்கிறதா என்பதைக் கண்டறியவும் கணக்கெடுப்புகள், ஆய்வுகளை அதிகாரிகள் மேற்கொள்கின்றனர். அகில இந்திய அளவில் மதுக்கடைகளின் மூட மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால், மாநில அரசு ஒத்துழைக்கும். தமிழகத்தில் மூடுப்படும் மதுக்கடைகள் குறித்த விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. விரைவில், மூடப்படும் கடைகளின் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு அமைச்சர் முத்துசாமி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x