Last Updated : 24 Sep, 2024 02:27 PM

 

Published : 24 Sep 2024 02:27 PM
Last Updated : 24 Sep 2024 02:27 PM

மு.மேத்தா, பி.சுசிலாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது அறிவிப்பு: செப்.30-ல் முதல்வர் வழங்குகிறார்

கவிஞர் மு.மேத்தா மற்றும் பாடகர் பி.சுசிலா | கோப்புப்படம்

சென்னை: கருணாநிதியின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில், கவிஞர் மு.மேத்தா, பின்னணி பாடகி பி.சுசிலா ஆகியோருக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை செப்.30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டும் வகையில் தமிழக அரசு சார்பில், மு.கருணாநிதி பெயரில் ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது’ ஆண்டு தோறும் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் திங்கள் 3-ம் நாளான்று வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு ரூ.10 லட்சம் ரூபாயும், நினைவுப் பரிசும் வழங்கப்படும் என்றும் கடந்த 2022-ம் ஆண்டு சட்டப்பேரவையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு அரசாணையும் வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், விருதாளர்களை தேர்வு செய்ய இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

கடந்த 2022-ம் ஆண்டு, ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை’ திரைப்படத் துறையில் தடம்பதித்து 500 திரைப்படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதிப் புகழ் குவித்துள்ள ஆரூர்தாஸ் எனப்படும் திருவாரூர் தாஸ்க்கு வழங்கப்படும் என அறிவித்த முதல்வர் ஸ்டாலின், ஆரூர்தாஸ் இல்லத்துக்கே 2022ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி நேரில் சென்று விருதை வழங்கினார். இந்த விருதுடன், பெண்மையைப் போற்றும் வகையில் ஒரு பெண் திரைக் கலைஞருக்கும் விருது வழங்க முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை 11-ம் தேதி அறிவித்தார்.

அதன்படி, திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையிலான குழு கூடி, தமிழ்ப் பேராசிரியரும், புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்தவரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவரும், மறைந்த முதல்வர் கருணாநிதியால் பாராட்டப்பட்டவருமான கவிஞர் மு.மேத்தாவுக்கும், திரையுலகில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலமொழிப் பாடல்களைப் பாடியவரும், ‘தென்னிந்தியாவின் இசைக்குயில்’ என்றும், ‘மெல்லிசை அரசி’ என்றும் பாராட்டப்பட்ட திரைப்படப் பின்னணிப் பாடகி பி.சுசிலாவுக்கும் 2023-ம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள் வழங்கிட பரிந்துரைத்துள்ளது.

இதையடுத்து, மு.க.ஸ்டாலின் வரும் செப்.30-ம் தேதி கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை தலைமைச் செயலகத்தில் வழங்குகிறார், என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x