Published : 24 Sep 2024 01:54 PM
Last Updated : 24 Sep 2024 01:54 PM

அதிமுக மகளிரணி பலரை ஓடவிட்டுள்ளது; அதை திமுகவினர் மறக்கமாட்டார்கள்: கண்டன ஆர்ப்பாட்டத்தில் பா.வளர்மதி பேச்சு

சென்னையில் அதிமுக மகளிரணி மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மகளிரணி செயலாளர் பா.வளர்மதி உரையாற்றினார்

சென்னை: “அதிமுக மகளிரணிக்கு பெரிய வரலாறு உண்டு. இந்த அணி பலரை ஓடவிட்டுள்ளது. அதை திமுகவினர் மறக்கமாட்டார்கள்,” என்று அக்கட்சியின் மகளிரணி மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பேசியுள்ளார் .

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் போதைப் பொருட்கள் புழக்கத்தையும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளையும் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து அதிமுக மகளிரணி மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் சென்னையில் இன்று (செப்.24) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த அதிமுக மகளிரணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி பேசியதாவது: அதிமுக மகளிரணிக்கு பெரிய வரலாறு உண்டு. இந்த அணி பலரை ஓடவிட்டுள்ளது. அதை திமுகவினர் மறக்கமாட்டார்கள்.

தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான பழனிசாமி சட்டப்பேரவையில் பேசினார். பொதுக்கூட்டங்களில் பேசியதுடன் பல அறிக்கைகள் மூலமாகவும் வலியுறுத்தினார். அப்படி இருந்தும் திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், அதிமுக மகளிரணி மூலம் திமுக அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் சிறுமி முதல் மூதாட்டி வரை பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர். தமிழகத்தில் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாவதாக புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது. கூட்டு பலாத்கார கொடுமையும் நடக்கிறது. போதைக் கலாச்சாரத்தால் அதிகரித்துள்ள பாலியல் வன்கொடுமைகளை தடுக்க திமுக அரசு தவறிவிட்டது. தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் சாதாரணமாகக் கிடைக்கின்றன.

போதைப் பொருட்கள் மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. அதனால் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றச் செயல்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. எம்ஜிஆர், ஜெயலலிதா, பழனிசாமி ஆட்சிக் காலங்களில் தமிழகம் பல்வேறு துறைகளில் முதலிடத்தில் இருந்தது. இப்போது திமுக ஆட்சியில் போதைப் பொருட்கள் புழக்கத்திலும், பாலியல் வன்கொடுமையிலும் முன்னிலை வகிக்கிறது. போதைப் பொருட்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்.

இந்த நிலை மாற வேண்டுமானால் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க பெண்கள் உறுதியேற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா, நடிகைகள் விந்தியா, காயத்ரி ரகுராம், மாநில, மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில், போதைப் பொருட்கள் புழக்கத்தையும் பாலியல் வன்முறைகளையும் தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுக மகளிரணியினர் கருப்பு உடை அணிந்து திரளாகக் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x