Published : 24 Sep 2024 12:48 PM
Last Updated : 24 Sep 2024 12:48 PM
புதுச்சேரி: கடல் அரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவு அமைப்பதற்காக பூமிபூஜை போடப்பட்டு 4 மாதங்களாகியும் பணிகளை துவங்காதததால் 4 மீனவ கிராம மக்கள் கிழக்கு கடற்கரைச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, கடல் அரிப்பைத் தடுக்க காலாப்பட்டு தொகுதி எம்எல்ஏ-வான கல்யாணசுந்தரம் தலைமையில் காலாப்பட்டு பகுதியில் கடலில் கருங்கல் கொட்டி தூண்டில் முள் வளைவு அமைக்கும் பணிக்கான பூமி பூஜை போடப்பட்டது. ஆனால் அந்தப் பணி கடந்த 4 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு துவங்காமல் உள்ளது. இதுதொடர்பாக பலமுறை மீனவ மக்கள் தொடர்பு கொண்டு கேட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் இப்பகுதியில் கிராமங்களில் கடல்நீர் உட்புகுவதால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து பெரியகாலாப்பட்டு, சின்னகாலாப்பட்டு, பிள்ளைசாவடி, கனக செட்டிகுளம், ஆகிய 4 மீனவ கிராம மக்கள் காலாப்பட்டு ஈசிஆரில் இன்று (செப்.24) சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அங்குவந்த போலீஸார், மறியலில் ஈடுபட்டிருந்த மீனவ மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அமைச்சர்கள் இங்கு நேரில் வந்து உறுதியளித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என அவர்கள் உறுதிபட தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து துணை ஆட்சியர் அர்ஜூன் ராமகிருஷ்ணன், எஸ்எஸ்பி நாகை சைதன்யா உள்ளிட்டோர் அந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மீனவர்கள் தரப்பில் கூறுகையில், “பலமுறை அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும் நடவடிக்கை இல்லை. இனியாவது தூண்டில் வளைவு அமைக்க கருங்கல் கொட்டும் பணியை உடனே துவங்க வேண்டும்” என்றனர்.இறுதியில் அதிகாரிகள், “வரும் 27-ம் தேதிக்குள் இப்பணிக்கு டெண்டர் விடப்பட்டு வரும் 30-ம் தேதிக்குள் பணிகள் துவங்கப்படும். டெண்டர் விடுவதில் தாமதம் ஏற்பட்டால் பொதுப்பணித்துறையே இப்பணியை செய்யும்” என்று உறுதியளித்தனர்.
அதைத் தொடர்ந்து “பணியை தற்போது உறுதியளித்தபடி தொடங்கா விட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்,” என்று சொல்லிவிட்டு மீனவ கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதன்பிறகு அப்பகுதியில் போக்குவரத்து சீர்செய்யப்பட்டு நிலைமை இயல்புக்கு திரும்பியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT