Last Updated : 24 Sep, 2024 11:46 AM

 

Published : 24 Sep 2024 11:46 AM
Last Updated : 24 Sep 2024 11:46 AM

பயங்கரவாத இயக்கத்துக்கு ஆட்கள் சேர்த்த விவகாரம்: தமிழகத்தில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை

சென்னை: பயங்கரவாத இயக்கத்துக்கு தடையை மீறி ஆட்கள் சேர்த்த விவகாரம் தொடர்பாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று (செப்.24) சோதனை மேற்கொண்டனர்.

ஹிஷாப் உத் தஹீரிர் என்ற அமைப்புக்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த விவகாரம் தொடர்பாக சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த பேராசிரியர் உட்பட பலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். சென்னை சைபர் கிரைம் போலீஸார் முதலில் இந்த வழக்கில் துப்பு துலக்கினர். பின்னர் இந்த வழக்கு என்ஐஏ-வுக்கு மாற்றப்பட்டது.

அப்பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரித்தனர். இந்நிலையில், சென்னையில் 10 இடங்களிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு இடத்திலும், நாகர்கோயிலில் ஒரு இடம் என தமிழகம் முழுவதும் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை ஏழு கிணறில் ரகுமான் என்பவர் வீட்டிலும் நீலாங்கரை வெட்டுவாங்கேணியில் முகமது ரியாஸ், சையது அலி ஆகியோர் வீடுகளிலும், ராயப்பேட்டையில் முகமது அலி என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.

சித்தாலப்பாக்கம், நன்மங்கலம் பகுதிகளில் சோதனை: பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில், தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட சித்தாலப்பாக்கம், நன்மங்கலம் ஆகிய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்மங்கலம் பாண்டியன் நகரில் வசித்து வரும் ரமேஷ் அகமது (28) என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இதேபோல் சித்தாலப்பாக்கம் வள்ளுவர் நகர், லோட்டஸ் காலனியில் வசிக்கும் முகமது யாசின் என்பவர் உலக நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஷாப் உத் தஹீரிர் என்ற அமைப்புக்கு ஆட்கள் சேர்ப்பு மற்றும் இந்த அமைப்புக்கு உறுதுணையாக இயங்குவதாக வந்த தகவலின் அடிப்படையில் அவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, சோதனை நடைபெறும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நன்மங்கலம் பாண்டியன் நகரில் என்ஐஏ சோதனைக்குள்ளான வீடு

இதேபோல் அடையார் பகுதியில் முகமது ரியாஸ் என்பவர் குடியிருக்கும் வீட்டில் இன்று காலை 6.15 மணி முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அதிகாரிகளின் சோதனையில் டிஜிட்டல் ஆவணங்கள் உட்பட பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x