Published : 24 Sep 2024 05:41 AM
Last Updated : 24 Sep 2024 05:41 AM

மதச்சார்பற்ற, சமூகநீதியை உள்ளடக்கிய சமதர்ம இந்தியா உருவாக சீதாராம் யெச்சூரி வழியில் பணியாற்றுவோம்: முதல்வர் ஸ்டாலின்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் படத்திறப்பு நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் அசோக் தாவ்லே, மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த தலைவர்கள் டி.கே.ரங்கராஜன், ஜி.ராமகிருஷ்ணன், கூட்டணிக் கட்சி தலைவர்கள் முத்தரசன், வைகோ, செல்வப்ஒபெருந்தகை மற்றும் இந்து என்.ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். | படம்: ம.பிரபு |

சென்னை

மதச்சார்பற்ற, சகோதரத்துவ, சமூகநீதி ஆகியவற்றை உள்ளடக்கிய சமதர்ம இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் சீதாராம் யெச்சூரி வழியில் நின்றுபணியாற்ற வேண்டும் என்று சென்னையில் நேற்று நடைபெற்ற அவரது நினைவேந்தல் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

மறைந்த் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியபொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு சென்னையில் நேற்று நடைபெற்றது. யெச்சூரியின் படத்தை கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் அசோக் தாவ்லே திறந்துவைத்தார்.

அதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவேந்தல் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் சொந்தமாக வாழ்ந்து வழிகாட்டியவர் சீதாராம் யெச்சூரி.இந்தியாவின் கருத்தியல் அடையாளமாக அவர் திகழ்ந்தார். அவரது மறைவு கருத்தியலுக்கு ஏற்பட்ட இழப்பாகும்.

கருணாநிதி மீதும் என் மீதும் பாசம் வைத்திருந்தார். கூட்டணி குறித்து பேசும்போது தமிழக தலைவர்கள் முரண்டு பிடித்தாலும் அவர் சிரித்த முகத்துடன் வந்துபேச்சுவார்த்தையை முடித்துவிட்டுச் செல்வார். அவரது புன்சிரிப்பு மறக்க முடியாது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உருவாக்கிய முக்கியமான அரசியல் தலைவர்களில் சீதாராம்யெச்சூரியும் ஒருவர். இளைய சமுதாயத்தினருக்கு வழிகாட்டியாக வாழ்ந்தார். இடதுசாரி கருத்தியலைகடைசி மூச்சு வரை பின்பற்றினார். இண்டியா கூட்டணி உருவாவதற்கும் முக்கிய காரணகர்த்தாவாக இருந்தார்.

அவர் விட்டுச் சென்ற பணிகளை நாம் தொய்வில்லாமல் தொடர வேண்டும். கல்வியையும் அதன்மூலம் பயின்ற அரசியலையும் சமூக மாற்றத்துக்காக பயன்படுத்தினார். மதச்சார்பற்ற, சகோதரத்துவ, சமூகநீதி ஆகியவற்றை உள்ளடக்கிய சமதர்ம இந்தியாவை உருவாக்குவதற்காக நாம் அனைவரும் அவர் வழியிலே நின்று பணியாற்ற வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல்தலைமைக் குழு உறுப்பினர் அசோக் தாவ்லே பேசும்போது, ‘சீதாராம் யெச்சூரி தனது வாழ்நாள் முழுவதும் ஏழை மக்களின் முன்னேற்றத்துக்காகவும், இடதுசாரி கொள்கையை மக்களிடம் கொண்டுசேர்க்கவும் தீவிரமாக பாடுபட்டார்.ஐக்கிய முன்னணி ஆட்சியின்போது குறைந்தபட்ச செயல் திட்டம்,தகவல் அறியும் உரிமைச் சட்டம்கொண்டு வந்ததில் அவரது பங்கு முக்கியமானது’ என்றார்.

முன்னதாக, மார்க்சிஸ்ட் கட்சிமாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை உரையாற்றினார். அப்போது துக்கத்தால் அவரது நா தழுதழுத்தது. தொடர்ந்து அவர் பேசும்போது, “சீதாராம் யெச்சூரி மறைவு தமிழகத்தில் உள்ள 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் தோழர்களுக்கு பேரிழப்பாகும். அடிப்படை சமூக மாற்றத்துக்காக மார்க்சீயத்தை தூக்கிப்பிடித்தார். அவரது அந்த லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் செயல்படுவதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி" என்றார்.

இந்த நிகழ்வில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்து என்.ராம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழுஉறுப்பினர் உ.வாசுகி, மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) லிபரேசன் மாநிலச்செயலாளர் பழ.ஆசைத்தம்பி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்தேசியத் தலைவர் காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் யெச்சூரிக்கு புகழாரம் சூட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x