Last Updated : 07 Jun, 2018 06:28 PM

 

Published : 07 Jun 2018 06:28 PM
Last Updated : 07 Jun 2018 06:28 PM

தென்மேற்கு பருவமழை தீவிரம்; சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை: தமிழ்நாடு வெதர்மேன்

தென்மேற்கு பருவமழை இன்று முதல் தீவிரமடைந்துள்ளதால் சுற்றுலா செல்வோர் எந்த மாவட்டங்களை தவிர்க்கலாம் என ‘தமிழ்நாடு வெதர்மேன்’ பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.

மும்பை முதல் கன்னியாகுமரி வரையிலான மேற்கு கடற்கரையோரப் பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டி உள்ள மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவமழை இன்று முதல் தீவிரமடைந்துள்ளது என்று ‘தமிழ்நாடு வெதர்மேன்’ தெரிவித்துள்ளார்.

ஆதலால், தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் பகுதிகளில் கன மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் சுற்றுலா செல்பவர்கள் அந்த இடங்களுக்குச் செல்வதை அடுத்த 10 நாட்களுக்குத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து தனது முகநூலில் தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் எழுதிவரும் எழுதிவரும் பிரதீப்ஜான் கூறியுள்ளதாவது:

இன்று முதல் 10 நாட்கள் கனமழை..

மும்பை முதல் கன்னியாகுமரி வரையிலானமேற்கு கடற்கரையின் உச்சி முதல் அடிமட்டம் வரையிலான பகுதிகளிலும், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களிலும் இன்று முதல் தென் மேற்குப்பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்தப் பகுதிகளில் அடுத்த 10 நாட்களுக்கு கன மழை முதல் மிக கனமழையை எதிர்பார்க்கலாம்.

குறிப்பாக கோவை மாவட்டம்(வால்பாறை), நீலகிரி மாவட்டம், தேனி(பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகள்), கன்னியாகுமரி(பேச்சிப்பாறை மண்டலம்), நெல்லை(மாஞ்சோலை முதல் பாபநாசம் வரை) ஆகிய பகுதிகளில் இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு கனமழைபெய்யக்கூடும்.

இந்த மழையால், இந்த மேற்கு தொடர்ச்சி மலையைஒட்டி அமைந்துள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்கும் என்று நம்பலாம். பெரும்பாலான அணைகள் நமக்கு மேற்கு தொடர்ச்சி மலையைஒட்டியே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வால்பாறை பகுதிகள்

வால்பாறை, நீலகரி மலைப்பகுதிகளில் அடுத்த 10 நாட்களுக்கு குறிப்பாக கனமழை முதல் மிக கனமழையை எதிர்பார்க்கலாம். ஒரு சில நாட்களுக்கு மிக, மிக கனமழை இருக்கும். இந்த இரு மாவட்டங்கள் மிகவும் கண்காணிப்பில் இருக்க வேண்டியவைகளாகும். சின்னக் கல்லாறு,தேவலா, அப்பர் பவானி, சோலையாறு, பரம்பிக்குளம் உள்பட மேலும் சில பகுதிகளில் விழப்புடன் இருக்க வேண்டும்.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்திருக்கும் ஈரோடு சத்தியமங்கலம், திண்டுக்கல் கொடைக்கானல் மலைப்பகுதி, பொள்ளாச்சி மலைப்பகுதி ஆகியவற்றில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சுற்றுலா செல்வோர் கவனத்துக்கு…

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடகாவின் குடகு மலைப்பகுதி, வயநாடு(கபினி), மூணாறு, வால்பாறை, கோவா, மகாபலேஸ்வர், கர்நாடக கடற்கரைப்பகுதி, மலைப்பகுதிகள் ஆகியவற்றுக்கு சுற்றுலா செல்லதிட்டமிட்டு இருந்தால், அதை சற்று தள்ளிப்போட்டுக் கொள்ளவும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் அடுத்த 10 நாட்களுக்கு ஒட்டுமொத்தமாக 1500 மிமீ (15.செ.மீ) மழைகூட பெய்யலாம். கவனமாக திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

மும்பையில் மழையின் ஆட்டம் தொடங்கியது:

மும்பையில் இன்று முதல் மழை தொடங்கி இருக்கிறது. அடுத்து வரும் நாட்களில் மும்பையில் மழை தீவிரமடையும். நகர்புறங்களில் சில நேரங்களில் தொடர்ந்து இடைவிடாது பெய்யலாம், வானத்தை கிழித்துக்கொண்டு மழை பெய்தது போன்று பெய்யலாம்.

மும்பைக்கும் ரத்னகிரி, மங்களூரு, கோழிக்கோடு பகுதிகளில் மிக கனமழை இருக்கும். அடுத்து வரும் நாட்களில் மங்களூரு நகரில் அதிகமான மிக கனமழை இருக்கும். கோவாவில் மழை மிகக் கடுமையாக இருக்கும் என்பதால், சுற்றுலா செல்வதை முடிந்தவரை தவிர்க்கலாம்.

10 நாட்களுக்கு தவிர்த்துவிடுங்கள்

மஹாராஷ்டிரா முதல் கேரளா வரையிலான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், மலைப்பகுதிகளிலும் பயணிப்பதை தவிர்க்கலாம். தமிழகத்திலும் ஒரு சில மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா திட்டமிட்டு இருந்தால், 10 நாட்களுக்கு தள்ளிப்போடவும்.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு

சென்னையில் இன்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இந்த மழைக்குப் பின் சென்னையில் மட்டுமல்லாது, மற்ற பகுதிகளிலும் வெப்பச்சலனத்தால் கிடைக்கும் மழையும் குறைந்துவிடும்.

இவ்வாறு பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x