Last Updated : 23 Sep, 2024 04:13 PM

 

Published : 23 Sep 2024 04:13 PM
Last Updated : 23 Sep 2024 04:13 PM

மதுரையில் பாஜக உறுப்பினர்கள் சேர்க்கை பணி தீவிரம்: பூத்தில் 200 பேரை சேர்த்தால் கேடயம் பரிசு

பிரதிநிதித்துவப் படம்

மதுரை: அதிக உறுப்பினர்களை சேர்க்கும் பூத் நிர்வாகிகளுக்கு வீடுகளுக்கே சென்று மத்திய அமைச்சர் மற்றும் மாநில நிர்வாகிகளைக் கொண்டு கேடயம் பரிசளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மதுரையில் பாஜக உறுப்பினர்கள் சேர்ப்பு தீவிரமடைந்துள்ளது.

நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் செப்.1-ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. பழைய உறுப்பினர்கள் புதுப்பித்துக் கொள்ளவும், புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவும் கட்சியினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக மண்டலம் வாரியாக பொறுப்பாளர்கள் நியமித்து பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு பூத்திலும் குறைந்தது 200 உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும், தீவிர உறுப்பினர்களாக சேர்பவர்கள் ஒவ்வொருவரும் 50 பேரை உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பாஜகவினர் வீடு வீடாகச் சென்று உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர். கட்சி நிர்வாகிகள் தெரிந்தவர்களுக்கு சமூக வலைதளத்தில் இணைப்புகளை அனுப்பி அதன் வழியாக உறுப்பினர்களாக இணைய வலியுறுத்தி வருகின்றனர். மத்திய அமைச்சர்கள், பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்து கட்சியினரை உற்சாகப்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க பாஜக திட்டமிட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் எச்.ராஜா மாநகர் மாவட்டத்திலும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மதுரை கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்திலும் உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தனர். இதையடுத்து, மதுரை மாநகர், கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் உறுப்பினர்கள் சேர்ப்பு தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், 200 உறுப்பினர்கள் சேர்க்கும் இலக்கை நிறைவேற்றும் பூத் நிர்வாகிகளின் வீடுகளுக்கு மத்திய அமைச்சர்கள், கட்சியின் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள் நேரில் சென்று பாராட்டு தெரிவிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் கூறுகையில், "பூத் நிர்வாகிகள் தேசப்பணிக்காக முழு நேரம் ஒதுக்கி 200 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இந்த இலக்கை நிறைவேற்றும் பூத் நிர்வாகிகளின் வீடுகளுக்கு, வரும் நாட்களில் மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சியின் தேசிய மற்றும் மாநில தலைவர்கள், முக்கிய நிர்வாகிகளை அழைத்து வந்து பாராட்டி கேடயம் வழங்கி கவுரவிப்போம்.

எனவே, அனைத்து நிர்வாகிகளும் உறுப்பினர்கள் இலங்கை நிறைவேற்றி அதற்கான நகல்களை மாவட்ட நிர்வாகிகளிடம் ஒப்படைக்க வேண்டும். சக்கி கேந்திரம் மற்றும் அணி பிரிவு நிர்வாகிகள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பந்தல் அமைந்து உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்களை நடத்த வேண்டும்" என்று மகா சுசீந்திரன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x