Last Updated : 23 Sep, 2024 03:54 PM

2  

Published : 23 Sep 2024 03:54 PM
Last Updated : 23 Sep 2024 03:54 PM

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தமிழக பாஜக வலியுறுத்தல்

சென்னை: “திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்,” என்று தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பதி லட்டு பிரசாதம் சர்ச்சை உலகம் முழுவதும் உள்ள இந்து பக்தர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாகவும், போதுமான உள் சோதனை ஆய்வகங்கள் உருவாக்கப்படவில்லை என்றும் பிரசாத பணிகளுக்கான தயாரிப்புகள் முறைப்படி நடக்கவில்லை என்றும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். பக்தர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் விதமாக, ஆந்திர மாநில அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முக்கியமாக, உடனடியாக நீதித்துறை விசாரணையை அறிவிக்க வேண்டும். மேலும், முழு உண்மை வெளிவர, அரசியல் இடையூறு இல்லாமல் உண்மைகளை கண்டுபிடிக்க சிபிஐயிடம் விசாரணையை ஒப்படைக்க வேண்டும். உலகுக்கே வழிகாட்டும் இந்து மதத்தின் தொன்மையான இந்த கோயிலில் நடைபெற்ற இந்த சர்ச்சைகளால் மிகுந்த கவலையடைந்துள்ள கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலம் அரசாங்கத்தால் திருமலையின் புனிதத்தை பாதுகாக்க முடியும்.

மேலும், பக்தர்களின் நம்பிக்கையை மேம்படுத்த முடியும். அதுமட்டுமில்லாமல், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தின் எதிர்கால செயல்பாடுகளில் முழுமையான சீர்திருத்தம், வெளிப்படை தன்மை உள்ளிட்ட தேவஸ்தான நிர்வாகத்தில் வலிமையான கட்டமைப்பை உறுதி செய்ய வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x