Last Updated : 23 Sep, 2024 02:09 PM

 

Published : 23 Sep 2024 02:09 PM
Last Updated : 23 Sep 2024 02:09 PM

கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லைக்குள் வந்தது

சென்னை குடிநீருக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர்  தமிழக  எல்லைக்கு வந்தடைந்தது

திருவள்ளூர்: சென்னை குடிநீர் தேவைக்காக, கடந்த 19-ம் தேதி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் தமிழக எல்லையை வந்தடைந்தது.

சென்னையின் குடிநீர் தேவைக்காக, தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ், ஆந்திர அரசு ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி, ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி என, 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை வழங்க வேண்டும். அந்தவகையில், ஆந்திர அரசு, சென்னைக் குடிநீருக்காக ஜூலை முதல் அக்டோபர் வரை வழங்க வேண்டிய கிருஷ்ணா நீரை வழங்க வேண்டும் எனக் கோரி, தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள், ஆந்திர நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு கடந்த ஜூலை முதல் வாரத்தில் கடிதம் எழுதினர்.

இதையடுத்து, சென்னை குடிநீருக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து, தெலுங்கு - கங்கை திட்ட கால்வாய் மூலம் விநாடிக்கு 1,200 கன அடி கிருஷ்ணா நீரை கடந்த 19 - ம் தேதி காலை 11 மணியளவில், ஆந்திர மாநிலம்- வெங்கடகிரி எம்எல்ஏ-வான ராமகிருஷ்ணா திறந்து வைத்தார்.

கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர், 152 கி.மீ., தூரம் பயணித்து, தமிழக எல்லையான, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே தாமரைக்குப்பம் ஜீரோ பாயின்டுக்கு இன்று காலை வந்தடைந்தது.

விநாடிக்கு 195 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த கிருஷ்ணா நீரை, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ-வான டி.ஜெ, கோவிந்தராஜன் மற்றும் திருவள்ளூர் கோட்டாட்சியர் கற்பகம், தமிழக நீர் வளத்துறை அதிகாரிகளை மலர் தூவி வரவேற்றனர்.

தமிழக எல்லையை வந்தடைந்துள்ள கிருஷ்ணா நீர், 25 கி.மீ., தூரம் பயணித்து இன்று இரவு அல்லது நாளை காலை பூண்டி ஏரியை சென்றடையும் என, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x