Published : 23 Sep 2024 01:08 PM
Last Updated : 23 Sep 2024 01:08 PM
சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள் மீது அதிக அளவில் அபராதம் விதிப்பதைத் தடுத்திடவும், மீனவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரைச் சேர்ந்த 37 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கடந்த செப்.21-ம் தேதி அன்று சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்களிடம் அதிக அளவில் அபராதம் வசூலிப்பதைத் தடுத்திடவும், மீனவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (செப்.23) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தின் விவரம் வருமாறு: தமிழகத்தைச் சேர்ந்த 37 மீனவர்கள், IND-TN-16-MO-3451, IND-TN-16-MO-1544 ஆகிய பதிவெண்களைக் கொண்ட இரண்டு படகுகள் மற்றும் பதிவு செய்யப்படாத ஒரு படகு என மூன்று படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் கடந்த செப்.21-ம் தேதி அன்று சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
நான் ஏற்கெனவே சுட்டிக்காட்டியபடி, தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன்பிடிக்கும் போது, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.
கைது செய்யப்படும் மீனவர்களிடம், அவர்களது சக்திக்கு மீறிய அபராதங்களை இலங்கை நீதிமன்றங்கள் விதித்து வருகின்றன. அதோடு, மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அதிகாரிகள் இதுபோன்று கைது செய்வதைத் தடுத்திட உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .
எனவே, கைது செய்யப்படும் மீனவர்களிடம் அதிக அளவில் அபராதம் விதிப்பதைத் தடுத்திட இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும், சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT