Published : 23 Sep 2024 12:08 PM
Last Updated : 23 Sep 2024 12:08 PM
சென்னை: சென்னை - திருவள்ளூர் தடத்தில், அண்ணனூர் - திருமுல்லைவாயில் இடையே ரயில் தண்டவாள பாதை சற்று இறங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக, மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் பணிக்குச் செல்ல முடியாமல், பயணிகள் கடும் அவதியுற்றனர்.
சென்னை மற்றும் புறநகரில் பொது போக்குவரத்து சேவையில் மின்சார ரயில் போக்குவரத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை - தாம்பரம் உள்பட பல்வேறு வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் காலை, மாலை வேளைகளில் கூட்டம் நிரம்பிவழியும்.
இந்நிலையில், சென்னை - திருவள்ளூர் வழித்தடத்தில், அண்ணனூர் - திருமுல்லைவாயில் இடையே ரயில் தண்டவாளப் பாதை இன்று (திங்கள்கிழமை) காலை சற்று இறங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
இதன்விவரம் வருமாறு:அண்ணணூர் - திருமுல்லைவாயில் ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று இரவு பராமரிப்புபணி நடைபெற்றது. இதையடுத்து, இந்த தடத்தில் தண்டவாளப்பாதையை ரயில்வே ஊழியர் இன்று காலை பரிசோதித்து கொண்டிருந்தார். அப்போது, இந்த தடத்தில் குறிப்பிட்ட இடத்தில் தண்டவாளம் சற்று இறங்கிய நிலையில் இருந்ததைக் அவர் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
இதன் பேரில், ரயில்வே ஊழியர்கள் அங்கு விரைந்துவந்து, இன்று காலை 8.20 மணிக்கு பராமரிப்பு பணியில் ஈடுபடத் தொடங்கினர். இதையடுத்து, சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் தடத்தில் ஆங்காங்கே மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டன. மேலும், சில ரயில்கள் விரைவுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.
புறநகரில் இருந்து சென்னைக்கு பணிக்கு வருவதற்காக, திருவள்ளூர், வேப்பம்பட்டு உட்பட பல்வேறு ரயில் நிலையங்களுக்கு இன்று காலையில் வந்த பயணிகள், குறிப்பிட்ட நேரத்தில் மின்சார ரயில்கள் வராததால், கடும் சிரமத்தை சந்தித்தனர். ரயில்வே நிர்வாகத்தால் முறையான அறிவிப்பும் செய்யப்படாததால் குழப்பமடைந்தனர்.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தும் ரயில்கள் வராததால், பலரும் மாற்று வாகனத்தில் வேலைக்குச் செல்ல தொடங்கினர். இதற்கிடையில், அண்ணனூர் - திருமுல்லைவாயில் இடையே ரயில் தண்டவாளம் இறங்கிய இடத்தில் பிரச்சினை சரிசெய்யப்பட்டு, ரயில் சேவை ஒரு மணி நேரம் தாமதமாக இயங்கத் தொடங்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT