Published : 23 Sep 2024 12:05 PM
Last Updated : 23 Sep 2024 12:05 PM
வேலூர்: அரசுப்பள்ளியில் வளைகப்பு நிகழ்ச்சி நடத்தி ரீல்ஸ் வெளியான விவகாரத்தில் வகுப்பு ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநல்லூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் மாணவிகள் சிலர் இரண்டு மாதங்களுக்கு முன்பு சக மாணவி ஒருவருக்கு வளைகாப்பு நடத்துவது போன்று பள்ளியிலே நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் ரீல்ஸாக வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூகவலை தளங்களில் வேகமாக பரவியது.
இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி விசாரணை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக, அந்த பள்ளியின் வகுப்பு ஆசிரியை சாமுண்டீஸ்வரியை சஸ்பெண்ட் செய்து கடந்த 20-ம் தேதி உத்தரவிட்டார். மேலும், அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை பிரேமா மற்றும் பணியில் இருந்த ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கினார். இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மாணவிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் ஆசிரியர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை பழிவாங்கும் வகையில் இருப்பதாக கூறியிருப்பதுடன், சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என கோரி வருகின்றனர். இதற்கு, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கண்டனம் தெரிவித்ததுள்ளது.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து இன்று (செப்-23) பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT