Published : 23 Sep 2024 12:00 PM
Last Updated : 23 Sep 2024 12:00 PM
சென்னை: தொழில்துறை சார்பில், தஞ்சாவூர், சேலம் மாவடங்களில் ரூ.60 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை காணொலி வழியே இன்று (செப்.23) திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சுற்றுச்சூழல், வனத்துறை, கூட்டுறவுத்துறையில் புதிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் ரூ.4.66 கோடியில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உணவுப்பொருள் சோதனைக்கூடம், ரூ.17.04 கோடியில் கட்டப்பட்டுள்ள 4 சேமிப்புக் கிடங்கு வளாகங்களை காணொலி வழியே திறந்து வைத்தார்.
மேலும், ரூ.36.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 58 நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடங்கள் மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் ரூ.15.22 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களையும் திறந்து வைத்தார். இதுதவிர, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் 110 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
தொடர்ந்து, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில், அரசுப்பணியாளர் தேர்வாணையம் வாயிலாக உதவி வனப்பாதுகாவலர் பணியிடத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 9 பேருக்கும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவிப்பொறியாளர் பணியிடத்துக்கு தேர்வுசெய்யப்பட்ட 48 பேரில் 5 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
மேலும், தொழில்துறை சார்பில் தமிழகத்தில் சிறுநகரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை கொண்டு செல்லும் நோக்கில், தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் தாலுகா, பிள்ளையார்பட்டி கிராமத்தில் ரூ.30.50 கோடி மதிப்பிலும், சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகா, ஆனைக்கவுண்டன் பட்டி மற்றும் கருப்பூர் கிராமத்தில் ரூ.29.50 கோடி மதிப்பிலும் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களையும் காணொலி வழியே திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், அர.சக்கரபாணி, சிவ.வீ.மெய்யநாதன், மதிவேந்தன், டி.ஆர்.பி.ராஜா, தலைமைச்செயலர் நா.முருகானந்தம் மற்றும் துறை செயலர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT