Published : 23 Sep 2024 05:50 AM
Last Updated : 23 Sep 2024 05:50 AM

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் லேசான நில அதிர்வால் மக்கள் பீதி

தென்காசி/ திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் நேற்று மதியம் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், பாபநாசம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், மணிமுத்தாறு, மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் 12 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டது. இதேபோல, தென்காசி மாவட்டத்தில் கடையம், பொட்டல்புதூர், முதலியார்பட்டி, ஆழ்வார்குறிச்சி, வாகைகுளம், கல்யாணிபுரம், ஆம்பூர், ஆவுடையானூர், திப்பணம்பட்டி, பாவூர்சத்திரம், ஆலங்குளத்தில் அதிர்வு உணரப்பட்டது.

நில அதிர்வு உணரப்பட்ட இடங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைமற்றும் அதையொட்டிய பகுதிகளாகும். லேசான நில அதிர்வை உணர்ந்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். சில பகுதிகளில் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். சுமார் 3 விநாடிகள் வரை நீடித்த நில அதிர்வால் சில வீடுகளில் அடுக்கி வைத்திருந்த பாத்திரங்கள் கீழே உருண்டு விழுந்ததாக கூறப்படுகிறது.

மாவட்ட நிர்வாகம் விளக்கம்: நெல்லை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அம்பாசமுத்திரம் பகுதியில் மக்களால் உணரப்பட்ட நில அதிர்வு குறித்து தேசிய நில நடுக்கவியல் மையம் மற்றும் கடலியல் தகவல்சேவைகளுக்கான இந்திய தேசிய மையத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது, அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் நில அதிர்வு ஏதும் பதிவாகவில்லை என்று தெரிவித்தனர்.

நெல்லை மாவட்டத்தில் தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மூலம் கூட்டுப் பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தென்காசி வட்டம் ஆழ்வார்குறிச்சி மற்றும் கடையம் பகுதிகளில் காலை 11.55 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வந்துள்ளது. தற்போது வரை அரசின் இணையதளத்தில் நிலஅதிர்வு தொடர்பாக பதிவுகள் ஏதும் இல்லை. நில அதிர்வால் யாருக்கும் காயமோ, பிற சேதங்களோ ஏற்பட்டதாகவும் தகவல் இல்லை. கள அலுவலர்கள் அப்பகுதிகளை பார்வையிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்’’ எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x