Published : 22 Sep 2024 06:43 PM
Last Updated : 22 Sep 2024 06:43 PM
சென்னை: பொன்னேரி அருகே ரயில் தண்டவாளத்தில் சிக்னல் மாற்றும் கருவியின் போல்ட், நட்டுகள் கழற்றப்பட்ட சம்பவத்தில், மொத்தம் 13 நட்டுகள், 6 போல்ட்கள், இரண்டு காப்புகள் ஆகியவை மாயமாகி இருப்பதாக கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸில் நிலைய மேலாளர் புகார் அளித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி - அனுப்பம்பட்டு இடையே ரயில் தண்டவாளத்தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் சிக்னல் மாற்றும் கருவியின் போல்ட், நட்டுகள் கழற்றப்பட்டிருந்தது. இதை ரயில் தண்டவாளத்தில் சல்லி கற்களை நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவர் கண்டார். இது தொடர்பாக நிலைய மேலாளருக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து, ரயில் தண்டவாள பராமரிப்பாளர், பொறியாளர்களுக்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில், அவர்கள் அங்கு விரைந்து வந்து, ரயில் தண்டவாளத்தில் போல்டு, நட்டுகள் கழற்றப்பட்ட இடங்களில், அதை மீண்டும் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். ரயிலை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கில் இந்த போல்ட், நட்டுகளை மர்மநபர்கள் கழற்றி இருப்பார்களா என்ற கோணத்தில் ரயில்வே போலீஸார் விசாரணையை தொடங்கினர். ரயில்வே காவல் எஸ்பி ஈஸ்வரன் தலைமையில் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இதற்கிடையில், இந்த சம்பவத்தில், மொத்தம் 13 நட்டுகள், 6 போல்ட்கள், இரண்டு காப்புகள் மாயமாகி இருப்பதாக ரயில் நிலைய மேலாளர் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து ரயில்வே போலீஸார் கூறியதாவது: பொன்னேரி - அனுப்பம்பட்டு இடையே ரயில்வே தண்டவாளத்தில் 4 இடங்களில் பாதையை மாற்றிவிடும் சிக்னல் இணைப்பு கருவியின் போல்டு, நட்டுகள் கழற்றப்பட்டுள்ளன. ரயிலை கவிழ்க்க வேண்டும் என்ற சதி திட்டத்துடன் மர்மநபர்கள் யாராவது ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம்.
மொத்தம் 13 நட்டுகள், 6 போல்ட்கள், 2 காப்புகள் மாயமாகி உள்ளதாக பொன்னேரி ரயில் நிலைய அதிகாரி புகார் கொடுத்துள்ளார். இது குறித்து விசாரிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடத்தில் பணியாற்றிய பணியாளர்கள், இரவில் இப் பகுதியில் பதிவான செல்போன் அழைப்புகள், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி ஆகியவற்றை வைத்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT