Last Updated : 22 Sep, 2024 03:02 PM

1  

Published : 22 Sep 2024 03:02 PM
Last Updated : 22 Sep 2024 03:02 PM

2026-ல் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்: எல். முருகன் நம்பிக்கை

எல்.முருகன்

திருநெல்வேலி: 2026-ல் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திருநெல்வேயில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: உலகில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி பாஜக. 10 கோடி உறுப்பினர்கள் பாஜகவில் உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2-ம் தேதி உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை தொடங்கிவைத்தார். வருகிற அக்டோபர் 15-ம் தேதி வரை உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கை என்ற இலக்குடன் தீவிரமாக பணி நடந்து வருகிறது.

கடந்த 2014க்கு முன் மீனவர்கள் மீது தொடர்ந்து துப்பாக்கிசூடு சம்பவங்கள் நடந்தன. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் மீனவர்கள் மீது துப்பாக்கிசூடு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. கைது செய்யப்படும் மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீனவர்களுக்கு ரூ.1.30 லட்சம் மதிப்புள்ள படகு 60 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. 30 சதவீத கடனுதவியும் வழங்கப்படுகிறது.

தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இத்திட்டத்தில் அதிக அளவில் பயனடைந்துள்ளனர். மீனவர்களுக்கு கடல்பாசி வளர்ப்பு தொழிலையும் மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. மீனவர்கள் எல்லை தாண்டினால் அதை உணர்த்துவதற்கான கருவிகளை ஒரு லட்சம் படகுகளுக்கு கொடுத்து வருகிறோம்.

தமிழகத்தில் திராவிட ஆட்சி 50 ஆண்டுகளுக்கு மேல் உள்ளது. எங்காவது இரட்டை சுடுகாடு இல்லாத நிலை உள்ளதா?. எஸ்சி, எஸ்டி விடுதிகளில் முதல்வர் எப்போதாவது ஆய்வு செய்துள்ளாரா?. கோயில்களில் இருந்து அரசு வெளியேற வேண்டும். அரசுக்கு கோயிலில் என்ன வேலை?. இது தொடர்பாக தேசிய அளவில் விவாதித்து தீர்வு காண வேண்டும்.

மக்கள் பாஜகவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். 4 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி 18 சதவீத வாக்குகளை பெற்றது. அடிமட்ட அளவில் பாஜகவை பலப்படுத்தும் பணி நடக்கிறது. பாஜக கூட்டணி நிச்சயமாக 2026 தேர்தலில் ஆட்சி அமைக்கும். இவ்வாறு எல். முருகன் தெரிவித்தார். நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, மாவட்ட தலைவர் தயாசங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x