Published : 22 Sep 2024 01:42 PM
Last Updated : 22 Sep 2024 01:42 PM

மோடியின் ஆட்சியை காமராஜர் ஆட்சியோடு ஒப்பிடுவதா?: தமிழிசைக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

செல்வப்பெருந்தகை

சென்னை: ஊழலின் ஊற்றுக்கண்ணாகவும், ஆடம்பர அரசியலையும் மேற்கொண்டு வருகிற மோடி ஆட்சியை காமராஜர் ஆட்சியோடு ஒப்பிட்டுப் பேசுவது பெருந்தலைவருக்கு இழைக்கப்படுகிற மிகப்பெரிய துரோகமாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நிர்வாகியான தமிழிசை சௌந்தரராஜன் மோடி ஆட்சி தான் காமராஜர் ஆட்சி என்று பேசியிருக்கிறார். மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிற வெறுப்பு அரசியலையும், அதிகாரங்களை குவித்து வைத்துக்கொண்டு சர்வாதிகார பாசிச முறையில் செயல்பட்டு வருகிற பிரதமர் மோடியின் ஆட்சியை காமராஜர் ஆட்சியோடு ஒப்பிடுவது தமிழிசை சௌந்தரராஜனின் அறியாமையை காட்டுகிறது.

காமராஜர் ஆட்சி பற்றி குறைந்தபட்ச புரிதல் கூட இல்லாவிட்டால் காங்கிரஸ் தலைமையில் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்ற நோக்கத்துடன் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை தம்மை வருத்திக்கொண்டு பாதயாத்திரை மேற்கொண்ட அவரது தந்தை இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி என்பது மக்கள் நலன் சார்ந்த தமிழக மக்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்லுகிற பொற்கால ஆட்சி ஆகும். இன்றைய நவீன தமிழகத்திற்கு சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக அடித்தளமிட்டவர் காமராஜர். அனைத்து துறைகளிலும் அனைத்து மக்களுக்கும் சமநிலைத் தன்மையோடு ஆட்சிமுறையை வழங்கியவர் காமராஜர். பொதுவாழ்வில் எளிமை, நேர்மை, தூய்மைக்கு இன்றைக்கும் எடுத்துக்காட்டாகவும், முன்மாதிரியாகவும் திகழ்பவர் காமராஜர்.

ஊழலின் ஊற்றுக்கண்ணாகவும், ஆடம்பர அரசியலையும் மேற்கொண்டு வருகிற மோடி ஆட்சியை காமராஜர் ஆட்சியோடு ஒப்பிட்டுப் பேசுவது பெருந்தலைவருக்கு இழைக்கப்படுகிற மிகப்பெரிய துரோகமாகும். பெருந்தலைவர் காமராஜரிடம் அனைத்து மக்களும் சொந்தம் கொண்டாடலாம். ஆனால் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தபோது அவர் தங்கியிருந்த புது டெல்லி ஜந்தர் மந்தர் வீட்டின்மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி, அவர் வீட்டை எரித்து கலவரத்தில் ஈடுபட்ட பாரம்பரியத்தில் வந்துள்ள தமிழிசை சௌந்தரராஜன் கூறுவது சரியா என்பதை அவரது மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x