அமைச்சர் தா.மோ.அன்பரசன் | எடப்பாடி பழனிசாமி : கோப்புப் படங்கள்
அமைச்சர் தா.மோ.அன்பரசன் | எடப்பாடி பழனிசாமி : கோப்புப் படங்கள்

ஆலந்தூரில் அம்மா உணவகத்தை மூடவில்லை: பழனிசாமிக்கு அமைச்சர் கண்டனம்

Published on

சென்னை: ஆலந்தூரில் அம்மா உணவகத்தை மூடிவிட்டு, அரசு பள்ளி நடத்துவதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதற்கு புகைப்பட ஆதாரங்களுடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியின் ஆலந்தூர் மண்டலத்துக்குட்பட்ட வாணுவம்பேட்டை புதுத் தெருவில் மாநகராட்சி தொடக்கப் பள்ளிமற்றும் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. அப்பள்ளி வளாகத்தில் போதிய இடம் இருந்ததால் அதிமுக ஆட்சியில் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. தற்போது அந்த வளாகத்தில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையமும் கட்டப்பட்டு வருகிறது.

பள்ளி கட்டிடம் சேதம்: மாநகராட்சி பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை 65 மாணவர்களும், அங்கன்வாடியில் 25 குழந்தைகளும் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் சிதில மடைந்து இருந்ததால் பள்ளியை இடித்துவிட்டு, சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.42 கோடி மதிப்பீட்டில் பள்ளிக்கு 2 அடுக்கு தளம் கொண்ட புதிய கட்டிடம் கட்டும் பணி கடந்த மாதம் முதல் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே இங்கு கல்விபயிலும் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படக் கூடாது என்பதாலும், இவர்களது வசிப்பிடம் இப்பகுதியை சுற்றியே உள்ளதாலும் மாணவர்களின் வசதிக்காக இப்பள்ளி வளாகத்திலேயே அமைந்துள்ள அங்கன்வாடியில், தற்காலிகமாக மாநகராட்சியின் தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. ஒரு சில மாதங்களில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு, மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுவிடும்.

அதேநேரம் புதிதாக கட்டுமானம் நடைபெறும் இடத்தின் வழியாக பள்ளி குழந்தைகள் சென்றால், இடர்பாடு ஏற்படும் என்பதால் அங்கன்வாடி மையத்தின் பின்புறம் உள்ள அம்மா உணவக வளாகத்தின் வழியாக தற்காலிகமாக வழி ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. இதனை மேலோட்டமாக பார்த்த அப்பகுதியில் உள்ள அதிமுகவினர் கட்டுக்கதையை அவிழ்த்துவிட்டுள்ளனர். வளாகத் தில் அமைந்துள்ள அம்மா உணவகம் மிகச் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.

உண்மை நிலை இப்படி இருக்கையில் தீர விசாரிக்காமல் மக்கள் மத்தியில் அம்மா உணவகங்களை மூடுவதுபோல ஒரு மாயத்தோற்றத்தை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிக்கையாக வெளியிட்டுள்ளார். உண்மை நிலை என்ன என்று அறியாமல் பொய்யான அறிக்கையை வெளியிடுவது ஒரு முன்னாள் முதல் வருக்கு அழகல்ல. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in