Published : 21 Sep 2024 08:54 PM
Last Updated : 21 Sep 2024 08:54 PM

“அரசியலில் மாணவர்களுக்கு ஆர்வம் அவசியம்” - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேச்சு

வி.ஐ.டி.தொழில்நுட்பத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டி.ஆர்.பி‌.ராஜா மற்றும் கவுர விருந்தினர் இமானி தீபா வெங்கட் சான்றிதழ் வழங்கினார்.

மேலக்கோட்டையூர்: வி.ஐ.டி சென்னையில் சர்வதேச “டெக்னோ விஐடி 24” என்ற தொழில்நுட்பத் திருவிழா கடந்த 19-ம் தேதி தொடங்கியது. முதல் இரண்டு நாட்களில் ரோபோ ஷா, ட்ரோன் ஷோ உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டது. இதில், நாடு முழுவதிலும் இருந்து முன்னணி கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள், மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்று தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்வுகளை கண்டு ரசித்தனர்.

"டெக்னோ விஐடி-24"யின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. நிறைவு விழாவில் விஐடி துணைத் தலைவர் முனைவர் சேகர் விசுவநாதன் பேசுகையில், “தமிழகத்துக்கு அண்மையில் கூட ரூ.7,600 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது. தமிழகம் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும் மாநிலம், செயற்கை நுண்ணறிவின் வருகையால் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்று மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை. புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். நாம் அதற்கு ஏற்றாற் போல் நம் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தொழில்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா பேசும்போது, “பிறர் உங்களைப் பற்றி என்ன கூறினாலும் நீங்கள் உங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பது தான் முக்கியம். எனவே, மாணவர்கள் தங்களைப் பற்றி உயர்வாகக் கருத வேண்டும். இந்தியா சேவைகளுக்கான இடமாகத் திகழ்ந்து வருகிறது. அவ்வாறு, இல்லாமல் அதுபோன்ற வளர்ந்த நிறுவனங்களை நம் நாட்டிலும் உருவாக்க வேண்டும். அரசியலைப் பற்றி வெளியில் இருந்து குறை கூறாமல் சட்டம் இயற்றுபவர்களை தகுதியானவர்களாக தேர்ந்தெடுப்பதற்கான அடிப்படை முறைகளை பொது மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பொது மக்கள் தங்களது உரிமைகளை தெரிந்து கொண்டால் தான் பிறரை கேள்வி எழுப்ப முடியும்.

அரசியலில் மாணவர்களுக்கு ஆர்வம் அவசியம். அதை மாணவர்களுக்கு சரியான முறையில் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். தமிழக அரசு மாணவர்களின் தொழில்நுட்பத் திட்டங்களை வரவேற்கிறது. சிறந்த திட்டங்களாக இருந்தால் தேவையான வழிகாட்டுதலை வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது. இவை குறித்து மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோர் “Startup TN" என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். எதிர்காலத்தில் விண்வெளி ஆய்வுக் கூடம் தமிழகத்தில் அமைவதற்கான வாய்ப்புள்ளது. எனவே, தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் அதிக அளவில் உருவாகும்” என்று அவர் பேசினார்.

கெளரவ விருந்தினராக கலந்துகொண்ட ஸ்வர்ண பாரத் அறக்கட்டளையின் மேலாண்மை அறங்காவலரும், அக்ஷரா வித்யாலயாவின் தாளாளரும் விஷ்ணு குழுமத்தின் இணை மேலாண்மை இயக்குநருமான இமானி தீபா வெங்கட் பேசுகையில், “நம் வாழ்வில் முன்னேற்றம் அடைய மாற்றத்தை நம்மில் இருந்து தொடங்க வேண்டும். சமூகம் நம் வளர்ச்சிக்கு எவ்வாறு உதவியதோ அதே சமூகத்துக்கு நம்மால் முடிந்தவற்றை மீண்டும் அளிக்க வேண்டும். மாற்றம் ஒன்று தான் மாறாதது. எனவே, தற்போதைய சூழலுக்கு ஏற்ப தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். வாழ்வில் ஒரு குறிக்கோளை இலக்காகக் கொண்டு பணியாற்றினால் உயர் நிலையை அடையலாம்” என்றார்.

நிறைவு விழாவில் விஐடி சென்னையின் இணைத் துணை வேந்தர் முனைவர் டி. தியாகராஜன், வேந்தரின் ஆலோசகர் எஸ்.பி.தியாகராஜன், விஐடி சென்னையின் கூடுதல் பதிவாளர் முனைவர் பி.கே.மனோகரன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் பங்கு பெற்றனர். தொழில்நுட்பப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசளித்து பாராட்டு தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x