Published : 21 Sep 2024 08:46 PM
Last Updated : 21 Sep 2024 08:46 PM
கோவை: ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு தமிழக காவல் துறை அனுமதி அளிக்க வேண்டும் என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “1925-ம் ஆண்டு விஜயதசமி அன்று ‘ராஷ்ட்ரீய ஸ்வயம்சேகவ சங்கம்’ (ஆர்.எஸ்.எஸ்) தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் அணிவகுப்பும், பொதுக்கூட்டமும் நடப்பது வழக்கம். தமிழகத்தில் 1940-களில் இருந்த ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடந்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு, பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு காவல் துறை அனுமதி மறுத்து வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த திமுக அரசின் காவல் துறை அனுமதிக்கவில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த பிறகே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. ஏற்கெனவே உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்கள் நடந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தமிழகத்தில் 58 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு, பொதுக்கூட்டம் நடத்த அந்தந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாநகர காவல் ஆணையர்களிடம் அனுமதி கேட்டு ஆர்.எஸ்.எஸ் விண்ணப்பித்துள்ளது. இதுவரை எந்த பதிலையும் தராமல் காவல் துறை இழுத்தடித்து வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளும் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது. அதுபோல இந்த ஆண்டும் செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.இதுவரை நடந்த ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புகள் அனைத்தும் மிகவும் அமைதியுடன் நடந்திருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம் ஒரு பக்கம் முழங்கிக் கொண்டே, மறு பக்கம் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையைப் பறிக்கிறது திமுக அரசு. இது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, அக்டோபர் 6-ம் தேதி நடக்கும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு தமிழ்நாடு காவல் துறை அனுமதி அளிக்க வேண்டும். காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் இதில் தலையிட்டு ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT