Published : 21 Sep 2024 03:45 PM
Last Updated : 21 Sep 2024 03:45 PM
சென்னை: “வேலை வாங்கி தருவதாக வங்கதேசத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு போலி ஆதார் அட்டையை உருவாக்கி, சென்னைக்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் தள்ளிய நபர் கைது செய்யபட்டுள்ளார். எனவே, ஊடுருவல்காரர்கள் தஞ்சமடையவும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடவும் ஏற்ற சூழல் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. ஊடுருவல்காரார்களின் முதன்மை தேர்வாக தமிழகம் மாறியிருப்பதை இந்தச் சம்பவம் எடுத்து காட்டுகிறது” என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கதேச பெண் ஒருவர் திரிபுரா மாநில அகர்தலா பகுதியை சேர்ந்த முகமது யாசின் மியா என்பவனை காதலித்துள்ளார். அவன் அந்த பெண்ணுக்கு போலி ஆதார் அட்டை உருவாக்கி கொடுத்துள்ளான். வேலை வாங்கி தருவதாக அந்த பெண்ணை சென்னைக்கு அழைத்து வந்து விபச்சாரத்தில் தள்ளியது கண்டறியபட்டு கைது செய்யபட்டுள்ளான். இந்தச் சம்பவத்தில் தமிழகத்தில் அவனுக்கு உடந்தையாக இருந்தவர்கள் தலைமறைவாகி உள்ளனர் .
இந்தச் சம்பவத்தில் அந்த வங்கதேச பெண் இந்தியாவை அடைந்தவுடன் ஆதார் அட்டை உருவாக்கப்பட்டதும் திரிபுராவில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. எனவே, ஊடுருவல்காரர்கள் தஞ்சமடையவும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடவும் ஏற்ற சூழல் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. ஊடுருவல்காரார்களின் முதன்மை தேர்வாக தமிழகம் மாறியிருப்பதை இந்தச் சம்பவம் எடுத்து காட்டுகிறது. அந்த வகையில் தமிழக சட்டம் - ஒழுங்கும் மாநில பாதுகாப்பும் ஆபத்தான சூழலில் இருக்கிறது என்பதில் ஐயமில்லை
கடந்த வாரம் கோவையைச் சேர்ந்த ஒருவன் நாடெங்கிலும் உள்ள விபச்சார தரகர்களை ஒருங்கிணைத்து வாட்ஸ்அப் குழு உருவாக்கி செயல்பட்டது தெரியவந்தது. இதுவும் அதனுடன் தொடர்புடையதாக இருக்கலாம். இந்த வகையான குற்ற செயல்களை பார்க்கையில் ஊடுருவல்காரர்களுக்கு போலி அடையாள அட்டை உருவாக்குபவர்கள், மனித கடத்தல் குறிப்பாக பெண் கடத்தல் விபச்சார கும்பல் போன்றவை ஒருங்கிணைந்து செயல்படுகிறதோ என்று கருத இடமிருக்கிறது.
ஊடுருவல்காரார்கள் நாட்டின் எல்லையோர மாநிலங்களில் தஞ்சமடைவது நடந்து வருகிறது. ஆனால் ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள தமிழகத்தை தேர்வு செய்து தலைமறைவாக இருப்பது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு தோல்வி அடைந்துள்ளதை உறுதி செய்கிறது. அதே சமயத்தில் ஊடுருவல்காரார்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுப்பவர்கள் நாடெங்கும் பரவியுள்ளதை பல சம்பவங்கள் மூலம் அறியமுடிகிறது.
இவ்வாறான போலி அடையாள அட்டை மூலம் பிற தேசத்தினர் எளிதாக மக்களோடு மக்களாக கலந்து எளிதாக கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்படும். அது தேச பாதுகாப்புக்கும் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கும் ஆபத்து விளைவிக்கும். மேலும் அரசு சலுகைகள் மடைமாற்றப்பட்டு அதனால் அரசுக்கு வீண் விரயமும் ஏற்படுகிறது . நம் நாட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு உதவிகள் பறிபோகும் நிலை உள்ளது.
எனவே, இந்த வழக்கை மாநில அரசு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும். அதேபோல் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை சம்பவம் போல இன்னும் எத்தனை பேர் ஊடுருவி இருக்கிறார்கள்? அதன் பின்புலத்தில் இயக்குபவர்கள் யார்? ஆயிரம் கி.மீ. அப்பால் உள்ளவர்கள் தமிழகத்தை தேர்வு செய்வது ஏன்? அவர்களுக்கு இங்கே உதவியும் ஒத்துழைப்பும் தருவது யார்? என்பன போன்றவற்றை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்,” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT