Published : 21 Sep 2024 03:32 PM
Last Updated : 21 Sep 2024 03:32 PM
தஞ்சாவூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் மீது, தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதிமுகவில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய 4 அமைச்சர்களில் ஒருவராக இருந்தவர் ஆர்.வைத்திலிங்கம். இவர் வீட்டுவசதித் துறை, வனத்து றை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட துறைகளுக்கு அமைச்சராக பொறுப்பு வகித்தவர். மேலும் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வைத்துள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான ஆர்.வைத்திலிங்கம், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். இந்நிலையில், தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் சரவணன், வைத்திலிங்கம் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
சென்னை பெருங்களத்தூரில் உள்ள ஸ்ரீராம் குழுமத்துக்கு சொந்தமான 57.94 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்ட 14,53 வீடுகளுக்கான சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) அனுமதிக்காக 2013 ம் ஆண்டு ஸ்ரீராம் நிறுவனம் சார்பில் விண்ணப்பித்தனர். ஆனால், அப்போது வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுதுறை அமைச்சராக இருந்த ஆர்.வைத்திலிங்கம் அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். பின்னர் 2016-ல் அவசர அவசரமாக முறைகேடாக ரூ.27.90 கோடி பணத்தை வாங்கிக் கொண்டு அனுமதி வழங்கப்பட்டது தெரியவந்தது. இந்த அனுமதி வழங்க ஆர்.வைத்திலிங்கம் மற்றும் அவரது மூத்த மகன் பிரபு ஆகியோர் முறைகேடாக ரூ.27.90 கோடி பணத்தை அவர்கள் நடத்தி வரும் முத்தம்மாள் எஸ்டேட் நிறுவனத்துக்கு பெற்றுள்ளனர்.
பின்னர் வருமான வரித் துறை விசாரணையில், இந்த ரூ.27.90 கோடியை பாரத் கோல் கெமிக்கல் நிறுவனத்தினடமிருந்து கடனாக பெற்றதாக முத்தம்மாள் நிறுவனத்தினர், தங்களது அறிக்கையில் கூறியிருந்தனர். ஆனால், ஏற்கெனவே பாரத் கோல் நிறுவனம் எந்தவித வர்த்தக நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை எனத் தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய தஞ்சாவூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், ரூ.27.90 கோடி முறைகேடாக பெற்றது தெரியவந்ததை அடுத்து, ஆர்.வைத்திலிங்கம், அவரது மூத்த மகன் பிரபு ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் கடந்த 19-ம் தேதி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT