Published : 21 Sep 2024 01:58 PM
Last Updated : 21 Sep 2024 01:58 PM

கடலோர காவல்படை சார்பில் மெரினாவில் தூய்மைப் பணி: 450 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

சென்னை: இந்திய கடலோர காவல்படை சார்பில் இன்று மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரையில் நடைபெற்ற தூய்மை பணியில் 450 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன.

சர்வதேச கடலோர தூய்மை தினம் (ICCD) ஆண்டுதோறும் செப்டம்பர் 3-வது சனிக்கிழமையன்று உலகம் முழுவதும் கடலோரப் பகுதிகளில் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் கடற்கரைகளை சுத்தம் செய்ய மக்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகின் பெருங்கடல்கள் மற்றும் நீர்வழிகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.

இதையொட்டி இந்திய கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்தியம் சார்பில் மெரினா மற்றும் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் சர்வதேச கடலோர தூய்மை நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதில் இந்திய கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்திய ஐஜி டோனி மைக்கேல் பங்கேற்று, கடலோர தூய்மைப் பணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “கடலோர சுற்றுச்சூழலை பாதுகாப்பது, மனித நலனுக்கு மிகவும் நன்மை பயக்கும் செயலாகும். நுண் பிளாஸ்டிக் பொருட்களை கடலில் கொண்டு போய் சேர்ப்பது கடல் சுற்றுச்சூழலை பாதிக்கும். பொதுமக்கள் முயற்சித்தால், இதை தடுக்க முடியும். இது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் இதுபோன்ற கடலோர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது" என்றார்.

இந்த தூய்மை பணியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தேசிய மாணவர் படையினர், மத்திய, மாநில அரசு அலுவலர்கள், தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்ட 900 பேர் பங்கேற்று மெரினா, பெசன்ட்நகர் கடற்கரையில் கிடந்த குப்பைகளை அகற்றினர். இப்பணியில் மொத்தம் 450 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. அவை மாநகராட்சி மூலமாக முறையாக அப்புறப்படுத்தப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x